இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து பும்ரா விலகல்!

பும்ராவிற்கு பதிலாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. வரும் ஜூலை 3ம் தேதி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி தொடங்குகிறது. இந்நிலையில், இந்த டி20 போட்டியில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தை, அதன் மண்ணில் எதிர்கொள்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. தவிர, சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில், ஒருநாள், டி20 என அனைத்திலும் ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்திருக்கிறது இங்கிலாந்து அணி. உலக சாம்பியன் ஆஸ்திரேலியா, ஒரு போட்டியை கூட வெல்ல முடியாமல் வெளியேறியது. போதாத குறைக்கு, ஆஸ்திரேலிய தொடரில் காயம் காரணமாக இடம் பெறாமல் இருந்த ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், இந்தியாவுக்கு எதிரான தொடரில் அணியுடன் இணைந்துள்ளார். இதனால், இங்கிலாந்து அணி மேலும் வலுப்பெற்றுள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நாளை மறுநாள் (ஜூலை 3) தொடங்கவுள்ள டி20 போட்டியில் இருந்து பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயம் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த 27ம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டியில், 20வது ஓவரை வீசிய பும்ரா, பேட்ஸ்மேன் அடித்த பந்தை கேட்ச் செய்ய முயன்ற போது, அவரது விரலில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாகவே தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயத்தால் வெளியேறி இருப்பது, இந்திய அணியிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

அதேபோன்று, அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கு முன்பாக, இந்திய வீரர்கள் பயிற்சியின் ஒரு பகுதியாக கால்பந்து விளையாடிய போது, வாஷிங்டன் சுந்தர் காயமடைந்தார். இந்த காயம் குணமடையாததால், இவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பும்ரா டி20 தொடரில் இருந்து மட்டும் நீக்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். ஆனால், வாஷிங்டன் சுந்தர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளார்.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீபக் சாஹர், பும்ராவிற்கு பதிலாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சுந்தருக்கு பதிலாக க்ருனல் பாண்ட்யா மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close