இத்தனை வருட கிரிகெட் சரித்திரத்தில் எத்தனையோ விக்கெட் கீப்பர்களை களங்கள் கண்டிருக்கின்றன. ஆனால், தோனி போன்ற ஒரு சில விக்கெட் கீப்பர்களையே அந்த களங்கள் நிலையாக தாங்கிப் பிடித்திருக்கின்றன.
குறிப்பாக, நவயுக கிரிக்கெட்டில் தோனியின் விக்கெட் கீப்பிங்கிற்கும் சரி, பவுலர்ஸ்களுக்கு தோனி அளிக்கும் ஆலோசனையாக இருந்தாலும் சரி, அதன் டிரெட் மார்க் வேல்யூவே தனி. இதனை நாம் சொல்லவில்லை. புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
நடப்பு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை, ஒருநாள் அல்லது டி20 போட்டிகளில் டெத் ஓவர்களில் பவுண்டரி லைனில் பார்ப்பீர்கள். எந்த கேப்டனும், கடைசிக் கட்டத்தில் எல்லையில் ஃபீல்டிங் செய்ய மாட்டார்கள். களத்தின் நடுவே நின்று, பீல்டர்களை ஒழுங்குப்படுத்தி, பவுலர்களுக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், கோலியோ சத்தம் போடாமல் ஃபீல்டிங் செய்துக் கொண்டிருப்பார்.
அதற்கு காரணம் ஸ்டெம்ப்புகளுக்கு பின் நிற்கும் எம்.எஸ்.தோனி... கள வியூகத்தை தோனியின் மேல் உள்ள நம்பிக்கையில் ஒப்படைத்து விட்டு ஃபீல்டிங் செல்வார் கோலி.
குறிப்பாக, ஸ்பின்னர்களுக்கு தோனியின் ஆலோசனை எப்போதும் கைக் கொடுத்திருப்பதை நாம் போட்டிகளில் கண் கூடாகவே பார்த்திருக்கிறோம். நடப்பு ஐபிஎல்-ல் ஹர்பஜனை வைத்து க்றிஸ் கெயிலை காலி செய்தது இதற்கு நிகழ் உதாரணம்.
இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா ஜோடி கோலோச்சியதில் தோனியின் பங்கு அளப்பறியது. 2017 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ரிஸ்ட் ஸ்பின்னர்களான சாஹல் - குல்தீப் யாதவ் கூட்டணி இந்திய அணியில் ஆதிக்கம் செய்யத் தொடங்கியதிலும் தோனியின் அபார ஐடியாக்களின் பங்கு இல்லை என்று எவராலும் மறுக்க முடியாது.
ஆனால், குல்தீப் யாதவ் தற்போது சொல்லியிருக்கும் கருத்து தான் தோனி ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
சியட் கிரிக்கெட் விருது வழங்கும் நிகழ்வில் 'Outstanding Performance of the Year 2019' விருது வென்ற குல்தீப் யாதவ்விடம், 'தோனி, போட்டியின்போது பலமுறை பந்துவீச்சாளர்களுக்கு டிப்ஸ் வழங்குவார். நீங்கள் எப்போதாவது தோனி வழங்கும் டிப்ஸை கேள்வி கேட்டதுண்டா?' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
May 2019
இதற்குப் பதிலளித்த குல்தீப், "பலமுறை தோனியின் முடிவுகள் தவறாகியுள்ளது. ஆனால், சீனியர் வீரர் என்பதால் அவரிடம் அதைச் சொல்ல முடியாது" என்றார் நகைச்சுவையாக.
தொடர்ந்து பேசியவர், "அவர் சும்மா வந்து ஏதாவது சொல்லிக்கொண்டு இருக்க மாட்டார். மிக குறைவாகத்தான் பேசுவார். ஏதாவது சில டிப்ஸ் வழங்க வேண்டும் என அவர் எண்ணினால் மட்டுமே வந்து பேசுவார்" என்றார்.
இவையனைத்தையும் அவர் நகைச்சுவை தொனியில் சொன்னாலும், ரசிகர்கள் அதை ஏற்கவில்லை. வழக்கம் போல், சமூக தளங்களில் அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி கேப்டனாக செயல்பட்ட போது, குல்தீப் தோனி ஆலோசனைப்படி பந்து வீசாததால், 'பந்து வீச்சை மாத்துறியா.. இல்லை பவுலரா மாற்றட்டுமா' என்று தோனி கேட்டது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு கருத்துக்கு பின்னாடியும் ஓவ்வொரு காரணங்கள்... அவ்வளவு தான்!.