நேற்று நடந்த கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
நடப்பு தொடரில் கலக்கிய இளம் வீரருக்கான விருதை (Emerging Player) 19 வயதான பிரான்சின் கைலியன் எம்பாபே பெற்றார். 1958-ம் ஆண்டு பீலேவுக்கு பிறகு இறுதிப்போட்டியில் கோல் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை எம்பாபே பெற்றுள்ளார்.
சிறு வயதில் எம்பாபே, போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வெறித் தனமான ரசிகர் ஆவார். இதனால் தனது 13வது வயதில், ரொனால்டோவை சந்தித்து எம்பாபே புகைப்படம் எடுத்துக் கொண்டார். 'ரொனால்டோவை போல சிறந்த வீரராக உருவாக வேண்டும் என்பதே எனது கனவு' என்று எம்பாபே அப்போதே கூறியிருந்தார்.
ஆனால், வெறும் வார்த்தைகளோடு அதனை நிறுத்திவிடாமல், அதற்காக கடுமையாக உழைத்து, ஆறு வருடங்கள் கழித்து, அதுவும் தனது ஹீரோவான ரொனால்டோ விளையாடிய உலகக் கோப்பையிலேயே தானும் விளையாடி, சிறந்த வளரும் வீரருக்கான விருதை வென்றுள்ளார் எம்பாபே.