ஒப்பந்தத்தை மீறி ஊடகத்திடம் பேசியதற்காக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவை ஒரு வருட காலத்திற்கு சஸ்பெண்ட் செய்வதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதையடுத்து, இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரா, இலங்கை கிரிக்கெட் வீரர்களின் உடல்தகுதி குறித்து விமர்சித்திருந்தார். இலங்கை அணியில் உள்ள வீரர்கள் உடற்பருமன் கொண்டவர்கள் என்னும் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே மலிங்கா கூறும்போது: விளையாட்டு வீரர்களுக்கு எப்படி சிறப்பாக விளையாடுவது என தெரியும். "கிளிக்கூண்டு குறித்து குரங்குக்கு என்ன தெரியும்" என விமர்சித்திருந்தார்.
இதையடுத்து, ஓப்பந்ததை மீறி ஊடகத்திடம் பேசியதாக மலிங்காவிடம் இலங்கை கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தியது. இதற்காக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு மலிங்காவிடம் விசாரணை நடத்தப்பட்டது. முடிவில், இலங்கை கிரிக்கெட் வாரியம் மலிங்கா மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
அதில், இந்த விவகாரத்தில் மலிங்காவுக்கு ஓராண்டு விளையாட தடை விதிக்கப்படுகிறது( முதல் 6 மாதத்தில் மலிங்காவின் செயல்பாட்டை பொருத்து, அடுத்த 6 மாத தண்டனை முடிவு செய்யப்படும் ). மேலும், அடுத்து மலிங்கா பங்கேற்கும் ஒருநாள் போட்டியில் அவரது ஊதியத்தில் 50 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என தண்டனை விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வரும் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள இலங்கை-ஜிம்பாப்வே அணிகளிடையேயான தொடரில் மலிங்காவுக்கு விளையாட தடையில்லை என தெரிவித்துள்ளது. இலங்கை- ஜிம்பாப்வே இடையே 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.