ஒரு நல்ல கேப்டனின் தவறான முடிவு, எத்தனை பேரின் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறது என்பதற்கு ஸ்டீவன் ஸ்மித் தான் ஆகச் சிறந்த உதாரணம். போட்டியில் வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக, குறுக்கு வழியை தேர்ந்தெடுத்து, ஒரு இளம் வீரரை ஊக்கப்படுத்தி பந்தை சேதப்படுத்த வைத்து, இன்று செய்தியாளர்கள் முன்பு, வெட்கி தலை குனிந்து அழுகிறார்.
'ஸ்டீவ் ஸ்மித்திற்காக நான் உண்மையில் வருத்தப்படுகிறேன்' என தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளசிஸ் சொல்லும் அளவிற்கு, அழுதுள்ளார் ஸ்மித். ஆனால், பந்தை சேதப்படுத்த ஐடியா கொடுத்தது என்னவோ டேவிட் வார்னர் என்றே கூறப்படுகிறது. விசாரணையிலும் அது உறுதியாகியுள்ளது. அவர் ஐடியாவை சொல்ல, ஸ்மித் அதை ஏற்றுக் கொள்ள, இளம் வீரர் கேமரோன் பேன்கிராஃப்டை வைத்து காரியத்தை முடித்தனர். ஆனால், கேமரா இதைக் கண்டுபிடித்து, இப்போது அவர்களது கிரிக்கெட் வாழ்க்கையை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. ஸ்மித், வார்னருக்கு ஓராண்டும், பேன்கிராஃப்டுக்கு 9 மாதமும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விவகாரத்தில் பயிற்சியாளர் டேரன் லீமனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது விசாரணையில் நிரூபணம் ஆனது. இதனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கும் அவரே கோச்சாகவே தொடர்ந்தார். அடுத்த ஆண்டு வரை அவரது பணிக்காலம் உள்ளது.
ஆனால், தலைமை கோச் பதவியில் இருந்து விலகப் போவதாக டேரன் லீமன் இன்று அறிவித்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது தான் கோச்சாக எனது கடைசி தொடர் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நான் பதவியில் இருந்து விலகுகிறேன்.
நான் ஸ்டீவ் ஸ்மித்தை நினைத்து உண்மையில் வருத்தம் கொள்கிறேன். செய்தியாளர்கள் முன்பு ஸ்மித் அழுததை நான் பார்த்தேன். அனைத்து வீரர்களும் இதைப் பார்த்து வேதனை அடைந்துள்ளனர். நல்ல மனிதர்களும் சில சமயம் தவறுகள் செய்வதுண்டு.
எனக்கு இந்த சம்பவம் குறித்து எதுவுமே தெரியாது. ஆனாலும், நானும் எனது குடும்பமும் கடந்த ஒரு வாரகாலமாக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டோம். எங்கள் மீது அனைவரும் வைத்திருந்த நம்பிக்கை சிதைந்து போயிருப்பதற்காக நான் வருத்தப்படுகிறேன்.
நேற்று கூட, நான் பதவியில் இருந்து விலகவில்லை என்று தான் சொல்லி இருந்தேன். ஆனால், ஸ்மித் அழுததை பார்த்த பின், நான் தொடர்ந்து பதவியில் நீடிப்பது அழகல்ல. அதனால் பதவி விலகுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.