குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது டி20 போட்டியில், நியூசிலாந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய தொடக்க வீரர்கள் கப்தில் மற்றும் மன்ரோ ஆரம்பம் முதலே அடித்து ஆடினர். கப்தில் 45 ரன்களில் அவுட்டானாலும், சிறப்பாக ஆடிய மன்ரோ சதம் விளாசினார். இது அவரது 2-வது டி20 சதமாகும். 58 பந்துகளை சந்தித்த மன்ரோ, 7 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உதவியுடன் 109 ரன்கள் குவித்து இறுதி வரை களத்தில் நாட் அவுட்டாக திகழ்ந்தார். இதனால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் நெஹ்ரா ஓய்வு பெற்றிருப்பதால், அவருக்கு பதிலாக மொஹம்மத் சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டார். இதுதான் சிராஜின் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும். ஆனால், சிராஜ் தனது நான்கு ஓவரில் 53 ரன்கள் விட்டுக் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். இதில் வில்லியம்சன் விக்கெட் எடுத்தது மட்டுமே அவருக்கு ஆறுதல்.. ஆனால், அணிக்கு?
இதைத் தொடர்ந்து, மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் 5 ரன்னிலும், தவான் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் கேப்டன் கோலி 65 ரன்னும், தோனி 49 ரன்கள் எடுத்தாலும், அணியை வெற்றிப் பெற வைக்க முடியவில்லை. முடிவில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், நியூசிலாந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பாக வெற்றிப் பெற்றது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, நியூசிலாந்து 1-1 என சமன் செய்துள்ளது.