இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் இறுதி டி20 போட்டி, திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன்ஃபீல்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்று நடைபெற்றது. மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியதால், 8 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது.
டாஸ் வென்ற நியூசி., கேப்டன் வில்லியம்சன் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/11/z718-300x217.jpg)
மழை பெய்திருப்பதால், பந்து நன்றாக ஸ்விங் ஆனது. இதனால், ரன் குவிப்பதில் இந்திய வீரர்கள் திணறினர். இந்நிலையில், இந்திய அணி 8 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசி., அணி வீரர்களும், இந்திய பவுலர்களுக்கு கடும் சவாலாக விளங்கினர். இடையிடையே விக்கெட்டுகள் விழுந்தாலும், இலக்கை நெருங்கிக் கொண்டிருந்தனர்.
இறுதியில், 8 ஓவர்களில் அந்த அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால், 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதன்மூலம், 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு, சொந்த மண்ணில் தொடரை இழக்காத பெருமையை தக்கவைத்துக் கொண்டது டீம் இந்தியா. அட்டகாசமாக பந்துவீசிய பும்ரா 2 ஓவர்கள் வீசி, 9 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதைத் தொடர்ந்து ஆட்ட நாயகன் விருதும், தொடர்நாயகன் விருதும் பும்ராவுக்கு வழங்கப்பட்டது.
இந்த தோல்வியின் மூலம், டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து, 120 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு சரிந்தது. 124 புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதலிடம் பிடித்தது. 119 புள்ளிகளுடன் இந்தியா 5-வது இடத்திலேயே நீடிக்கிறது.
தொடர்ந்து, இந்த வெற்றியை பல இந்திய கிரிக்கெட் பிரபலங்களும் வாழ்த்தி வருகின்றனர்.