இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளிடையேயான 2-வது டி20 போட்டி கவுகாத்தியில் நடைபெறுகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியா அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இரண்டாவது டி20 போட்டியிலும் வென்று டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களம் காண்கிறது. அதேநேரத்தில், ஒருநாள் போட்டித்தொடரை 4-1 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலிய அணி, டி20 தொடரை பறிகொடுக்கக் கூடாது என்ற நோக்கில் களம் இறங்குகிறது. எனவே இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளிடையேயான இரண்டாவது டி20 போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்கு ஆரம்பமே பலத்த அதிர்ச்சி! தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா (8 ரன்கள்), கேப்டன் விராட் கோலி (0 ரன்), மனிஷ் பாண்டே (6 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து பெஹ்ரெண்டார்ப் பந்துவீச்சில் வீழ்ந்தனர். வெறும் 2.2 ஓவர்களில் 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம் கண்டது.
மனிஷ் பாண்டேவும் 6 ரன்களில் பெஹ்ரெண்டார்ப் பந்துவீச்சில் காலியாக, 4.3 ஓவர்களில் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தத்தளித்தது. 5-வது விக்கெட்டுக்கு கேதர் ஜாதவுடன், டோனி இணைந்தார்.
அணியின் ஸ்கோர் 60-4(9.4) என்றிருக்கையில் டோனி 13 ரன்களில்(16 பந்து, 1 பவுண்டரி) அவுட் ஆனார். விரைவிலேயே கேதர் ஜாதவும் 27 ரன்களில்(27 பந்து 3 பவுண்டரி, 1 சிக்ஸர்) நடையைக்கட்ட இந்திய அணி , 67 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து வந்த புவனேஷ்குமார் 1 ரன் எடுத்து வந்த வேகத்தில் பெலிவியன் திரும்பினார். இதனால், 12.4 ஓவர்களிலேயே இந்திய அணி 70 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது.
கேதர் ஜாதவுக்கு பிறகு ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோரின் சொற்ப பங்களிப்புடன் 20 ஓவர்களில் 118 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட் ஆனது.
பின்னர் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னர், பிஞ்ச் ஆகியோரை ஆரம்பத்திலேயே இழந்தது. இதனால் இந்திய வீரர்களுக்கு சற்றே நம்பிக்கை பிறந்தது. ஆனால் 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட்- ஹென்ரிக்ஸ் ஜோடி இந்திய ஸ்பின்னர்களான குல்தீப் யாதவையும், சாஹலையும் வெளுத்தனர்.
கடைசி வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. 15.3 ஓவர்களில் இவர்கள் வெற்றி இலக்கை எட்டினர். இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்து, டி 20 தொடரை 1-1 என சமன் ஆக்கியது ஆஸ்திரேலியா. ஏற்கனவே ராஞ்சியில் நடந்த முதல் டி 20 போட்டியை இந்தியா ஜெயித்தது குறிப்பிடத்தக்கது. 3-வது மற்றும் கடைசி டி 20 போட்டியில் ஜெயிக்கும் அணி, இந்தத் தொடரை கைப்பற்றும்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:Live cricket score of india vs australia 2nd t20 in guwahati virat kohli and co eye series win