இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா: 3-வது டெஸ்ட்டில் இன்னிங்க்ஸ் வெற்றி

இலங்கையை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி, மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்க்ஸ் வெற்றி பெற்று வாகை சூடியது.

இந்தியா, இலங்கை மோதும் மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி பல்லேகல்லேவில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ஒரேயொரு மாற்றமாக ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். ஐசிசி விதிமுறைகளுக்கு எதிரான நடத்தை மீறல்களில் ஈடுபட்டதாக கூறி, ஜடேஜாவிற்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி தடை விதித்திருந்தது. இதனால், இப்போட்டியில் இருந்து ஜடேஜா நீக்கப்பட்டு, குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.

அதேசமயம், இலங்கையை பொறுத்தவரை மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ரங்கனா ஹெராத், பிரதீப், தனஞ்செயா டி சில்வா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக, லக்ஷன் சங்கடன், குமாரா மற்றும் ஃபெர்னாண்டோ ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து இந்திய அணியில் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுலும், ஷிகர் தவானும் களமிறங்கினர். ஆரம்பம்முதல் தவான் அடித்து ஆடினார். இது டெஸ்ட் போட்டியா அல்லது ஒருநாள் போட்டியா என்று ரசிகர்கள் குழம்பும் வகையில், அவரது ஆட்டம் இருந்தது. பக்கபலமாக லோகேஷ் நிதானத்தை கடைப்பிடிக்க, இந்திய அணியின் ஸ்கோர் ‘சீரான’ வேகத்தில் உயர்ந்துக் கொண்டே இருந்தது. ரன் ரேட் 5.5-க்கும் மேல் இருந்தது.

எப்படியும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராகுல், 85 ரன்னில் மலிந்தா புஷ்பகுமாரா பந்துவீச்சில் கேட்ச் ஆனார். இருப்பினும், அவர் இந்த இன்னிங்ஸில் அரைசதம் எடுத்த போது, டெஸ்ட் போட்டியில்  தொடர்ந்து 7வது அரைசதத்தைப் பதிவு செய்தார். இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிகமுறை அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்தார். இந்தச் சாதனையை சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 5 வீரர்கள் படைத்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸின் எட்வீக்ஸ், சந்தர்பால், ஜிம்பாப்வேயின் ஆன்டிஃபிளவர், இலங்கையின் சங்ககாரா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் ஆகியோரின் சாதனைகளை ராகுல் சமன் செய்தார்.

தொடர்ந்து அதிரடி காட்டிய தவான், 1௦1 பந்தில் தனது ஆறாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் இலங்கை மண்ணில், டெஸ்ட் தொடரில் அதிகம் சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில், 3 சதங்களுடன் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டார். சேவாக் மற்றும் புஜாரா ஆகியோரும் அங்கு தலா 3 சதங்கள் எடுத்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர் 5 சதங்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

ஆனால், அதே புஷ்பகுமாரா பந்துவீச்சில் 119 ரன்கள் எடுத்திருந்த தவான் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 123 பந்துகளில் 17 பவுண்டரிகளின் உதவியுடன் இந்த ஸ்கோரை அடித்தார்.

அடுத்த சிறிது நேரத்தில், 33 பந்துளில் 8 ரன்கள் எடுத்திருந்த புஜாரா, சங்கடன் பந்துவீச்சில் மேத்யூசிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் கோஹ்லி 42 ரன்களுடனும், ரஹானே 17 ரன்களுடனும், அஸ்வின் 31 ரன்களிலும் வெளியேறினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்துள்ளது.

இரண்டாம் நாளான இன்று, ரிதிமான் சாஹா 16 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். ஆனால், அதிரடி வாணவேடிக்கை காட்டிய ஹர்திக் பாண்டியா, டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இதில் 8 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடங்கும்.

குறிப்பாக, இலங்கை வீரர் புஷ்பகுமாரா வீசிய போட்டியின் 116வது ஓவரில், 2 பவுண்டரி 3 சிக்சர்கள் என மொத்தமாக 26 ரன்கள் விளாசினார் பாண்ட்யா.

இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் விளாசிய இந்தியர் என்ற பெருமை பெற்றார். ஆனால், டெஸ்ட் அரங்கில், பிரைன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்), ஜார்ஜ் பெய்லி (ஆஸ்திரேலியா) ஆகியோர் ஒரே ஓவரில் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்துள்ளனர். இப்பட்டியலில் பாகிஸ்தான் அதிரடி மன்னன் அப்ரிடி (27 ரன்கள்) இரண்டாவது இடத்தில் உள்ளார்.

உணவு இடைவேளை வரை, இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 487 ரன்கள் எடுத்திருந்தது. பாண்ட்யா 93 பந்தில் 108 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து, உணவு இடைவேளைக்கு பின் களமிறங்கிய போது, ஹர்திக் பாண்ட்யா ரன் ஏதும் எடுக்காமல், சங்கடன் பந்தில் கேட்ச் ஆனார். இதனால், இந்தியா அதே ரன்னில் (487) ஆல் அவுட்டானது.

இதைத் தொடர்ந்து, தனது இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி அடுத்தடுத்து தனது விக்கெட்டுகளை பறிகொடுத்தது. முன்னணி வீரர்களான உபுல் தரங்கா 5 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 0 ரன்னிலும் அவுட்டானார்கள். கேப்டன் தினேஷ் சந்திமல் மட்டும் சிறிதுநேரம் தாக்குப்பிடித்து 48 ரன்கள் எடுத்தார். முடிவில், 37.4-வது ஓவரில் இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபாலோ ஆன் ஆனது. இதனால், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட அந்த அணி 352 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், ஷமி மற்றும் அஷ்வின் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 181 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி. முதல் இன்னிங்க்ஸில் குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்க்ஸில் அஸ்வின் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அந்நிய மண்ணில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் அனைத்து போட்டிகளிலும் இந்தியா வென்றது இதுவே முதல்முறையாகும்.

×Close
×Close