இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடவிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நாளை (25-ஆம் தேதி) தொடங்குகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் கொழும்புவில் நடந்த இலங்கை போர்டு லெவன் அணிக்கு எதிராக நடந்த இரண்டு நாள் பயிற்சிப் போட்டியில் சிறப்பாக ஆடி, அரைசதம் அடித்த தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால், அவர் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை. லோகேஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவரை ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, காலேவில் நாளை நடக்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் லோகேஷ் ராகுல் பங்கேற்கமாட்டார் என இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ஆனால், அவருக்கு பதிலாக யார் விளையாடுவார் என்பதனை வாரியம் குறிப்பிடவில்லை. இந்திய அணிக்கு இதுவொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த பிப்ரவரி - மார்ச் மாதம் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, தோள்பட்டை பகுதியில் காயமடைந்த லோகேஷ் ராகுலால், 10-வது ஐ.பி.எல். தொடர், இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் லீக் தொடர், அதன்பின் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் போன்றவற்றில் அணியில் இடம்பெற முடியவில்லை.
இந்தநிலையில், மீண்டும் உடல்நலம் தேறிய லோகேஷ் ராகுல், இலங்கை தொடருக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், மீண்டும் அவர் தற்போது வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது அவருக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.
ஏற்கனவே, மணிக்கட்டுப் பகுதியில் ஏற்பட்ட வலியால், இலங்கை தொடரில் இருந்து, தமிழக வீரர் முரளி விஜய் விலகினார். தற்போது லோகேஷும் விலகியிருப்பதால், இரண்டாம் தர ஒப்பனிங் கூட்டணியாக உள்ள ஷிகர் தவான் - அபினவ் முகுந்த் ஆகியோர், காலேவில் நடக்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.