உலகின் மிக முக்கியமான விளையாட்டுத் தொடர்களில் முதன்மையிடம் வகிப்பது ஒலிம்பிக் போட்டிகள் தான். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோடைக்கால போட்டிகள் மற்றும் குளிர்கால போட்டிகள் என இரண்டு முறை நடைபெறுகின்றது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெருகின்றன.
வரும் 2020-ம் ஆண்டில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ளது. இதேபோல், 2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து பாரீஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர்களுக்கிடையே போட்டி நிலவியது. இந்நிலையில், 2024 ஒலிம்பிக் போட்டிகள் பாரீஸ் நகரிலும், 2028-ம் ஆண்டுக்கான போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் நடக்க இருப்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இம்மாதம் (ஆகஸ்ட்) லாஸ் ஏஞ்சல்ஸ் நகர சபை உறுப்பினர்களும், அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டியின் இயக்குனர்களும் சந்தித்துப் பேசுகின்றனர். இதில் இறுதி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது. இந்த ஒப்பந்தங்கள் முடிவானால், ஒலிம்பிக்ஸ் போட்டிகளை பாரீஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நடத்துவது குறித்து அதிகாரப்பூவ அறிவிப்பு வெளியாகும். இதன்பின், போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் 1.8 பில்லியன் டாலர் நிதி வழங்கும்.
லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடப்பது ஏறக்குறை உறுதியாகி இருப்பதால், மகிழ்ச்சியுடன் பேட்டியளித்துள்ள அந்நகர மேயர் எரிக் கேர்சிட்டி, "மீண்டும் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கான மிகப்பெரிய அடியை நாம் எடுத்து வைத்துள்ளோம். இது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் புதிய அத்தியாத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.