சென்னை அணிக்கு திரும்பிய லுங்கி ங்கிடி! பில்லிங்ஸ் அணியில் இருந்து நீக்கம்?

பில்லிங்ஸ் நீக்கப்பட்டு லுங்கி ங்கிடி அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது

புனேவில் நேற்று நடந்த சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 7 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று இருப்பதால், இந்தத் தோல்வியால் சிஎஸ்கேவுக்கு பெரிய பாதிப்பு இல்லை. ஆனால், முக்கியமான ஓப்பனிங் பவுலர் தீபக் சாஹர் நேற்றைய போட்டியில் காயம் அடைந்திருப்பதால், இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டி அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனால், அடுத்துவரும் லீக் போட்டிகளில் அவர் ஆட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் சாஹர். இதனால், அவரது காயம் சிஎஸ்கேவின் பவுலிங் யூனிட்டில் நிச்சயம் பின்னடைவு தான்.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க பவுலர் லுங்கி ங்கிடி மீண்டும் சென்னை அணியுடன் இணைந்திருப்பதாக தலைமை கோச் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஐபிஎல் தொடர் ஆரம்பித்த போது, லுங்கி ங்கிடியின் தந்தை காலமானதால், அவர் தென்னாப்பிரிக்கா சென்றுவிட்டார். அதன்பின், தற்போது மீண்டும் சென்னை அணியுடன் அவர் இணைந்துள்ளார்.

22 வயதான லுங்கி இதுவரை மூன்று சர்வதேச போட்டியில் ஆடி, 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதுவும் எகானமி ரேட் 5.50 மட்டுமே. ரன்கள் கொடுப்பதில் மிகவும் சிக்கனம் காட்டக் கூடிய லுங்கி, நாளை (ஏப்ரல் 30) டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணிக்காக களமிறங்க நிறைய வாய்ப்புள்ளது.

தற்போது, வாட்சன், பில்லிங்ஸ், பிராவோ, இம்ரான் தாஹிர் என நான்கு வெளிநாட்டு வீரர்கள் அணியில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். சாஹருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், பில்லிங்ஸ் நீக்கப்பட்டு லுங்கி ங்கிடி அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. அப்படி அவர் அணியில் சேர்க்கப்பட்டால் நிச்சயம் பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என நம்பலாம்.

×Close
×Close