தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில், நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றது. திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடந்த முதல் போட்டியில், மதுரை சூப்பர் ஜெயண்ட் அணியும், தூத்துக்குடி பாட்ரியாட்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற மதுரை அணி கேப்டன் அருண் கார்த்திக், தூத்துக்குடி அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார். தன் தலையில் தானே மண்ணை வாரி இறைத்துக் கொண்டது போல் ஆகிவிட்டது இந்த முடிவு.
அதிரடி தொடக்க வீரர் வாஷிங்டன் சுந்தர் 11 ரன்னில் ரன் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் கௌஷிக் காந்தியும் 10 ரன்னில் அவுட்டானதால், ஒரளவிற்கு மகிழ்ச்சியுடன் மதுரை அணி ஆட்டத்தை தொடங்கியது. ஆனால், அதன்பின் களமிறங்கிய எஸ்பி நாதன் மதுரை அணியின் பந்துவீச்சை தவிடுபொடியாக்கினார். 33 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். இதில் இரண்டே இரண்டு பவுண்டரிகள் மட்டுமே. ஆனால், 9 சிக்ஸர்கள் பார்வையாளர்களிடம் சென்று விழுந்தன. ஷேன் வாட்சனைப் போல், மேக்ஸ்வெல்லைப் போல், சேவாக்கைப் போல் எந்தவித தயவு தாட்சனையும் காட்டாமல், பிரித்து மேய்ந்தார்.
அவருக்கு பக்கபலமாக கேப்டன் சுப்ரமணியன் ஆனந்தும் அதிரடி காட்டி 33 ரன்கள் எடுத்தார். இதனால், தூத்துக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது.
மதுரை தரப்பில் பொய்யாமொழி மட்டும் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதுதான் அந்த அணிக்கு ஒரே ஆறுதல்.
மிகவும் சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய மதுரை அணியில் தொடக்க வீரர்கள் அருண் கார்த்திக் மற்றும் ஷீஜித் சந்திரன் ஆகியோர் மட்டும் இரட்டை இலக்கை தொட்டனர். இறுதியில் பத்தாவது வீரராக களமிறங்கிய பழனி அமர்நாத்தும் இரட்டை இலக்கை (10 ரன்கள்) தொட்டார். மற்ற அனைத்து வீரர்களும் சிங்கிள் டிஜிட் தான்.
என்ன நடக்கிறது என்று சிந்திப்பதற்குள் அடுத்த விக்கெட் விழுந்துவிடும். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அதற்கடுத்த விக்கெட் வீழ்ந்துவிடும். இதுதான் அப்போட்டியின் சினாரியோவாக இருந்தது. முடிவில், 8.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மதுரை அணி, 59 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தூத்துக்குடி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் கணேஷ் மூர்த்தி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போடும் தூத்துக்குடி அணி, தொடர்ந்து 7 வெற்றிகளை குவித்து சாதனை படைத்துள்ளது. முந்தைய ஆண்டையும் சேர்த்தால் தூத்துக்குடி அணி தொடர்ச்சியாக சுவைத்த 12–வது வெற்றியாக இது அமைந்தது. அதே சமயம் கடந்த ஆண்டில் லீக் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் மண்ணை கவ்விய மதுரை அணி, இந்த சீசனிலும் ஒரு வெற்றி கூட பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது.
இதே மைதானத்தில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின. சேப்பாக் அணி ஏற்கனவே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் கேப்டன் சதீஷ், கோபிநாத் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. இதனால் கேப்டன் பொறுப்பை தலைவன் சற்குணம் ஏற்றார்.
டாஸ் ஜெயித்த திண்டுக்கல் அணி கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜெகதீசன் நிலைத்து நின்று விளையாட மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ஜெகதீசன் 53 ரன்களும், வில்கின்ஸ் விக்டர் 45 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்களில் யாருமே 15 ரன்களைக் கூட தாண்டவில்லை. இதனால், 20 ஓவர்கள் முடிவில், திண்டுக்கல் அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களே எடுத்தது.
எளிய சேசிங்கை நோக்கி களமிறங்கிய சேப்பாக் அணியில் ஒப்பனர்கள் சுபாஷ் 21 ரன்னிலும், சற்குணம் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின், சேப்பாக் அணிக்கு அந்தோணி தாஸும், சசிதேவும் கைகொடுத்தனர். சிறப்பாக ஆடிய அந்தோணி தாஸ் 38 ரன்னிலும், சசிதேவ் 45 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். கடைசி ஓவரில் சேப்பாக் அணியின் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டன. ஆதித்யா அருண் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை சந்தித்த ராகுல் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்து ஒரு ரன் எடுத்தார். 2-வது பந்தில் யோமகேஷ் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தில் ரன் இல்லை. புல்டாசாக வீசப்பட்ட 4-வது பந்தை எதிர்கொண்ட ராகுல், அதை சிக்சருக்கு தூக்கி, த்ரிலிங்குக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 146 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு இது 6-வது வெற்றியாகும். 4-வது தோல்வியை தழுவிய திண்டுக்கல் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இன்றைய கடைசி லீக்கில் கோவை கிங்ஸ் அணி திருச்சியை வீழ்த்தினால் 8 புள்ளிகளுடன் 4-வது அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழையும். மாறாக தோல்வி அடைந்தால் கோவை, திருவள்ளூர் வீரன்ஸ் ஆகிய இரு அணிகளில் ஒன்று ‘ரன்-ரேட்’ அடிப்படையில் அடுத்த சுற்று வாய்ப்பை பெறும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.