பாலிவுட் நட்சத்திரம் அஜய் தேவ்கன் நடிப்பில், அமித் ரவீந்தர்நாத் சர்மா இயக்கத்தில், 'இசைப் புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தாண்டு ஏப்ரலில் வெளிவந்த படம் மைதான் (Maidaan). முன்னாள் இந்திய வீரரும், பயிற்சியாளருமான சையது அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்று படமாக இப்படம் வெளியாகியுள்ளது.
கால்பந்து களத்தையும், இந்திய கால்பந்தையும் மையமாக வைத்து கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விளையாட்டை கருவாக வைத்து ஏராளமான படங்கள் வெளியாகி இருந்தாலும், இப்படம் பல சமயங்களில் நம்மை சீட்டின் நுனியில் அமர வைக்கிறது. திரைக்கதை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை என எல்லா வகையிலும், ஒவ்வொரு காட்சியிலும் நம்மை ஈர்க்கிறது.
படத்தின் பெயருக்கு ஏற்ப இப்படம் மைதானத்தில் இருந்து தொடங்குகிறது. 1952 ஹெல்சிங்கி ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு எதிராக யூகோஸ்லாவியா வீரர்கள் பந்தை உதைத்து கோல் போடுகிறார்கள். 10 - 1 என்கிற கணக்கில் அவர்கள் முன்னிலை பெற்று போட்டியை வெல்கிறார்கள். இந்தத் தோல்வியைத் தொடர்ந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீமின் தலைமைத்துவம் பற்றி கொல்கத்தாவில் நடக்கும் கால்பந்து கூட்டமைப்பு கூட்டத்தில் கேள்வி எழுப்பப்படுகிறது.
அதன்பிறகு, அவர் எப்படி 1956 ஆஸ்திரேலியா, 1960 இத்தாலி ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய வீரர்களை தயார் செய்கிறார், அவரது தலைமையிலான இந்திய அணி 1962 ஆசிய விளையாட்டு போட்டியில் எப்படி ஆடுகிறது, தென் கொரியா செல்லும் முன், அணி எதிர்கொண்ட தடைகள், இவை அனைத்தையும் இந்திய வீரர்கள் எப்படி தாண்டினார்கள், கேன்சர் நோயினால் போராடிய பயிற்சியாளர், இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்ய எப்படி உதவினார் என்பதை நம் கண் முன் நிறுத்துகிறார்கள்.
படம் என்பதை தாண்டி, நேரலையில் நடக்கும் போட்டிகளாக காட்சிகள் அமைந்துள்ளன. படத்தில் வரும் நிகழ்வுகள் மிக எதார்த்தமாக இருக்கின்றன. உடைந்த சிதைந்து கிடந்த தேரை ஒட்ட வைத்து இழுத்துச் செல்லும் பயிற்சியாளர் ரஹீமாக அஜய் தேவ்கன் வாழ்ந்திருக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனைவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். அஜய் தேவ்கனுக்கு மனைவியாக நடித்துள்ள பிரியாமணி, இந்திய பத்திரிக்கை அதிபராக வரும் கஜராஜ் ராவ், சுனி கோஸ்வாமியாக வரும் அமர்த்தியா ரே போன்றோரும் நடிப்பில் அசத்தி இருக்கிறார்கள்.
துஷார் காந்தி ரே மற்றும் ஃபியோடர் லியாஸ் படத்தின் காட்சிகளை பிரமாதமாக படம் பிடித்துள்ளார்கள். தேவ் ராவ் ஜாதவ் மற்றும் ஷாநவாஸ் மொசானி நெருடல் இல்லாமல் காட்சிகள் கோர்த்துள்ளார்கள். பின்னணி இசையில் கட்டிபோட்டு இருக்கிறார் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான். படத்தின் முடிவில் அவரது குரலில் ஒலிக்கும் பாடல் உணர்ச்சிகளால் உறைந்து கிடக்கும் நம்மை தட்டி எழுப்புகிறது. அதனுடன் நம்மை அறியாமல் வழிந்தோடுகிறது ஆனந்த கண்ணீர். கூடவே, படத்தின் எண்ட் கார்டில் வரும் பயிற்சியளர் சையது அப்துல் ரஹீம் பற்றி உண்மைச் செய்திகள் நம்மை வியக்க வைக்கின்றன.
இந்நிலையில், பயிற்சியளர் சையது அப்துல் ரஹீம் குறித்து தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய கால்பந்து வீரர் ராமன் விஜயன் நம்மிடம் பகிர்ந்து இருக்கிறார். தனது ஆசானாக இருந்த முன்னாள் இந்திய கால்பந்து வீரரும், பயிற்சியாளருமான சையத் நயீமுதீன் ரஹீமின் பயிற்சி பள்ளியில் எப்படி பட்டை தீட்டப்பட்டார் என்பது பற்றியும், ஏன் ஒவ்வொரு கால்பந்து வீரரும், ரசிகரும் பார்க்க வேண்டிய படமாக 'மைதான்' இருக்கிறது என்பது குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.
அலைபேசியில் நம்முடன் கால்பந்து பயிற்சியாளர் ராமன் விஜயன் பேசுகையில், "அவோரட (சையது அப்துல் ரஹீம்) சிஷ்யன் தான் (சையத் நயீமுதீன்) எங்களுடைய பயிற்சியாளராக இருந்தார். அவர் அடிக்கடி ரஹீம் சார் பத்தி சொல்லிக் கொண்டே இருப்பார். அவர் எப்படி நடந்து கொள்வார், எப்படி பயிற்சி அளிப்பார் என்பது பற்றியெல்லாம் நிறைய சொல்வார். இந்தப் படம் அவருக்கு கொடுத்த மிகப் பெரிய பரிசு, சமர்ப்பணம் என்பேன். ஒரு பயிற்சியாளருக்கு இதுபோல் பாராட்டு இந்தியாவில் யாரும் கொடுத்ததில்லை. அதனால், அது உண்மையிலே மிகப் பெரிய விஷயம் தான்.
படம் வெற்றியடைந்ததா, தோல்வி பெற்றதா என்பதெல்லாம் இங்கு வாதமில்லை. அவருக்கு பாராட்டு அளிக்கும் வகையில் படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. எப்போதுமே ஒரு பயிற்சியாளரை இந்த அளவுக்கு யாரும் நியாபகம் வைத்திருக்க மாட்டார்கள். நவீன விளையாட்டு உலகத்தில், ஒரு அணியினர் வெற்றி பெற்றார்கள் என்றால், அவர்கள் அந்தப் பயிற்சியாளரை அப்படியே வைத்திருப்பார்கள். தோல்வியுற்றால் தூக்கி எரிந்து விடுவார்கள்." என்று பயிற்சியளரின் முக்கியத்துவம் பற்றி அவர் கூறுகிறார்.
'மைதான்' படத்தில் 'கொல்கத்தா' நகரம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. கால்பந்துக்கும் கொல்கத்தாவுக்கும் இடையிலான உறவு குறித்து கால்பந்து பயிற்சியாளர் ராமன் விஜயன் பேசுகையில், "நானே கொல்கத்தாவில் விளையாடிய பிறகு தான் (1996 காலக் கட்டத்தில்), ஒரு பெரிய வீரராக வெளியுலகிற்கு தெரிய ஆரம்பித்தேன். அதற்கு முன்பு அங்கு நிறைய கால்பந்து கிளப் அணிகள் இருந்தன. தென்னிந்தியாவில் இருந்து கால்பந்து ஆடும் வீரர்கள் அங்கு சென்று தான் ஆட வேண்டிய காட்டாயம் இருந்தது. அங்கே ஆடினால் தான் வீரர்களுக்கு பணமும், புகழும் கிடைத்தது. ஈஸ்ட் பெங்கால், மோகன் பாகன் போன்ற கிளப் அணிகளில் ஆடினால், இந்தியாவுக்கு ஆடும் வாய்ப்பு எளிதில் கிடைக்கும். அது போன்ற அணிகளுக்கு ஆடும் போது தான் நீங்கள் இந்தியா முழுதும் அறியப்படுவீர்கள். அத்தகைய வெளிச்சத்தை கொல்கத்தா நகரம் கால்பந்து வீரர்கள் மீது பாய்ச்சியது.
கேரளா, ஐதராபாத், தமிழ்நாடு என தென்னிந்தியாவில் இருந்து அங்கு போய் கால்பந்து ஆடிய வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். கொல்கத்தா தான் இந்தியா கால்பந்தின் 'மெக்கா' என்பார்கள் இன்றளவும் அப்படியான சூழல் தான் இருக்கிறது. ஆனால், ஐ.எஸ்.எல் (இந்தியன் சூப்பர் லீக்) வருகைக்குப் பின், அந்த சூழல் இப்போது கொஞ்சம் மாறி இருக்கிறது." என்கிறார்.
இந்திய அணிக்காக ஆடி கால்பந்து ஜாம்பவான்களாக திகழும் தமிழகத்தைச் பீட்டர் தங்கராஜ், தர்மலிங்கம் எத்திராஜ், ஐசாயா அருமைநாயகம் ஆகியோரும் இந்தப் படத்தில் இடம் பெறுவது போன்ற காட்சி அமைப்புகள் இருக்கும். அவர்கள் குறித்து பயிற்சியாளர் ராமன் விஜயன் நம்மிடம் பேசுகையில், "பீட்டர் தங்கராஜ் கோல் கீப்பிங்கில் ஜாம்பவான். அந்த மூவரையுமே நான் சந்தித்து இருக்கிறேன். அவர்கள் தமிழகத்தை விட கொல்கத்தாவில் தான் மிகவும் பிரபலமானவர்கள்.
இந்தியாவுக்கு ஆடும் போதும் சரி, கிளப் அணிகளுக்கு ஆடும் போதும் சரி, அவர்கள் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்தவர்கள். இப்போது இருக்கும் தலைமுறையினருக்கு அவர்கள் பற்றி அதிகம் தெரியாது. அவர்கள் எங்களைப் போன்றவர்களுக்கு பெரிய அளவில் உத்வேகம் அளித்தவர்கள்.
என்னைப் பொறுத்தவரையில், இப்படம் உணர்வுபூர்வமாக இருந்தது. உணர்வுபூர்வமாக ஒரு வீரரை எப்படி கொண்டு வருவது என்பதும், உளவியல் ரீதியாக அவர்களை எப்படி தயார் படுத்துவது என்பதும், அதில் அழுத்தமாக சொல்லப்பட்டுள்ளது. கூடுதலாக, ஒரு பயிற்சியாளரின் ரோல் என்ன என்பதையும், அவரின் தனித்துவமான விஷயங்கள் என்ன என்பதைப் பற்றியும் மிக அற்புதமாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள்.
எந்தவொரு விளையாட்டுக்கும் ஒரு பயிற்சியாளர் எந்த அளவுக்கு முக்கியம் என்பதைத் தான் இப்படம் கடத்துகிறது. நீ என்னதான் திறமைசாலியா இருந்தாலும் உனக்குள்ள இருக்கிற திறமையை வெளிக் கொண்டு வந்து காட்டுறதுக்குன்னு ஒருத்தன் வேணும்." என்று அழுத்தமாக கூறுகிறார்.
சுமார் 3 மணி நேரம் 1 நிமிடம் ஓடும் 'மைதான்' படம் கால்பந்து மீதான காதலை மேலும் தூண்டுவதாகவும், இந்தியாவில் கால்பந்தின் அன்றைய சூழல் எப்படி இருந்தது, நவீன உலகத்தில் இருக்கும் நாம் கிடைக்கும் வாய்ப்பை எப்படி கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும், ஒவ்வொரு கால்பந்து வீரர் வாழ்க்கையிலும் பயிற்சியாளர் என்ன பங்கு வகிக்கிறார் என்பதை வெளிக்காட்டுகிறது. மைதான் படத்தை ஓ.டி.டி தளமான அமேசானில் பார்க்கலாம். படம் தமிழில் டப் செய்யப்பட்டும் இருக்கிறது. விளையாட்டு ரசிகர்களை தவிர 'சினிமா' ரசிகர்களும் நிச்சயம் பார்க்க வேண்டி படம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.