தெற்காசிய கால்பந்து தொடர்: ஒரு கோல் கூட அடிக்காத மாலத்தீவு சாம்பியன்! விரக்தியில் இந்திய அணி!

குரூப் போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்காமல், டாஸ் மூலம் இலங்கையை தாண்டி அரையிறுதிக்கு வந்த மாலத்தீவு சாம்பியன் ஆனது

ஆசைத்தம்பி

வங்கதேசத்தில் 7 நாடுகள் பங்கேற்ற தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி எட்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி, மாலத்தீவுடன் மோதியது. இந்த போட்டி இந்திய நேரப்படி நேற்று மாலை 6.30 மணிக்கு டாக்கா மைதானத்தில் தொடங்கியது.

நேற்றைய போட்டியில் தொடக்க முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதின. முதல் பாதியில் 1-0 என மாலத்தீவு முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில் மாலத்தீவின் அலி இரண்டாவது கோல் அடித்து அந்த அணியை 2-0 என முன்னிலை பெற வைத்தார்.

போட்டி முடிய 15 நிமிடங்களே இருந்த நிலையில், இந்திய வீரர் விஷால் ஒரு கோல் அடிக்க, இந்திய அணி அந்த கோலோடு திருப்திப்பட்டுக் கொண்டது. மேற்கொண்டு இறுதிவரை கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. இதனால், 2-1 என்ற கோல் கணக்கில் வென்று மாலத்தீவுகள் அணி இரண்டாவது முறையாக தெற்காசிய கால்பந்து தொடரை வென்று அசத்தியுள்ளது. இதற்கு முன்னதாக 2008ம் ஆண்டு மாலத்தீவுகள் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

இந்த தொடரில், தட்டுத் தடுமாறி அரையிறுதிக்குள் முன்னேறி, சாம்பியன் இந்தியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்தி மாலத்தீவுகள் கோப்பையைக் கைப்பற்றி இருக்கிறது. இந்தத் தோல்விக்கு யாரையுமே நாம் காரணமாக சொல்ல முடியாது. இந்தியா தனது மிக மோசமான நேரத்தை எண்ணி வருத்தப்பட்டுக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.

தொடரில் இரு அணிகளும் கடந்து வந்த பாதை

2015ம் ஆண்டு உட்பட 7 முறை தெற்காசிய கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்தமுறையும் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருந்ததாக ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. தொடரிலேயே, வீழ்த்தப்படாமல் இறுதிப் போட்டி வரை வலம் வந்த ஒரே அணி, இந்திய அணி தான். இத்தனைக்கும் சீனியர் வீரர்களான சுனில் சேத்ரி, குர்ப்ரீத் சிங் ஆகியோருக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு, இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டு இருந்தனர்.

குரூப் போட்டிகளில் மாலத்தீவு மற்றும் இலங்கையை 2-0 என வீழ்த்திய இந்திய அணி, அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை 3-1 என வீழ்த்தி நாக் அவுட் செய்தது. இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியில் நேற்று லல்லியன்ஜுவாலா சங்கட்டே விளையாடவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் ரெட் கார்டு வாங்கியதால் இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியை இழந்துவிட்டார். அவரின் வேகம் இல்லாதது பெரிய இழப்பாகி போனது. அவர் இல்லாவிட்டாலும், தொடர்ந்து கோல் அடித்து எதிரணிகளை மிரட்டிய மன்வீர் சிங்கை நம்பி இந்திய அணியின் அட்டாக் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், குரூப் போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்காமல், டாஸ் மூலம் இலங்கையை தாண்டி அரையிறுதிக்கு வந்தது மாலத்தீவுகள். இருப்பினும், அரையிறுதி போட்டியில் பலம்வாய்ந்த நேபாள் அணியை 3-0 என துவம்சம் செய்தது அசத்தியது. தனது அணி, மிகவும் சிறப்பாக விளையாடி உள்ளதாகவும், கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்புள்ளதாகவும், மாலத்தீவுகள் அணியின் பயிற்சியாளர் பீட்டர் செகேர்ட் தெரிவித்து இருந்தார். அதன்படி அவர்கள் வென்றும்விட்டார்கள்.

ரசிகர்களை ஏமாற்றிய இந்திய கால்பந்து அணி

கால்பந்து என்பது நமது நாட்டில் சில மாநிலங்களில் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேற்குவங்கம், கோவா, கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, திரிபுரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தான் கால்பந்து அதிகம் விளையாடப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் கிரிக்கெட் தான் டாப், தமிழகம் உட்பட.

ஃபிபாவின் முன்னாள் தலைவர் செப் பிளாட்டர், உலக கால்பந்து அரங்கில் இந்தியாவை ‘Sleeping Giant’ என்று அழைக்கிறார். கால்பந்து வளர்ச்சியில் இந்தியா இன்னும் பல படிகளை தாண்ட வேண்டும் என அவர் கூறுகிறார்.

லயோனல் மெஸ்ஸி, நெய்மர், ஹேரி கேன், கவானி, கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற நடப்பு கால்பந்து வீரர்களை மெய்மறந்து ரசிக்கும் இந்திய ரசிகர்கள், அதைப்போன்று இந்திய கால்பந்து வீரர்களை தங்கள் ஹீரோக்களாக நினைப்பதில்லை. குறைந்த பட்சம் போட்டிகளை கூட நேரில் வந்து பார்ப்பதில்லை.

தரவரிசையில் தற்போது இந்திய கால்பந்து அணி, 96வது இடத்தில் உள்ளது. ஆனால், நேற்றைய இறுதிப் போட்டியில் நிச்சயம் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அருமையான வாய்ப்பை இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது இந்தியா.

சுதந்திரம் அடைந்த பிறகு, 1948ம் ஆண்டு பிரான்ஸை 1-2 எனும் கோல் கணக்கிலும், 1956ம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவை 1 – 7 என்ற கணக்கிலும் இந்திய அணி வீழ்த்தி இருக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?. அப்படிப்பட்ட பலம் வாய்ந்த இந்திய அணி மீண்டும் உயிர்த்தெழுந்து வர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.

தெற்காசிய கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகள்

1993 – இந்தியா

1995 – இலங்கை

1997 – இந்தியா

1999 – இந்தியா

2003 – வங்கதேசம்

2005 – இந்தியா

2008 – மாலத்தீவுகள்

2009 – இந்தியா

2011 – இந்தியா

2013 – ஆப்கானிஸ்தான்

2015 – இந்தியா

2018 – மாலத்தீவுகள்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close