இரண்டு நாட்கள் முன்பு வரை இலங்கை அணியின் கேப்டனாக இருந்த ஏஞ்சலோ மேத்யூஸ் இன்று அணியிலேயே இல்லை. இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்தே நீக்கப்பட்டிருக்கிறார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கை அணி வங்கதேசத்திடம் 137 ரன்கள் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 91 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வி அடைந்தது.
இதனால், நேற்றுமுன்தினம் (செப்.24) இலங்கை அணியில் கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொள்ளும் படி, மேத்யூசை இலங்கை கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது.
இதை சற்றும் எதிர்பார்க்காத மேத்யூஸ், 'தோல்விக்கு என்னை பலியாடாக்கி விட்டீர்களே!' என்று தனது அதிருப்தியை கடிதம் மூலம் வெளிப்படுத்தினார்.
அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த விஷயங்கள் முக்கியமானது. அவர், "நான் 2017ம் ஆண்டே அனைத்து வடிவிலான கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டேன். ஆனால், அதற்கு பிறகு இலங்கை அணி அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் தொடர் தோல்வியைப் பெற, உபுல் தரங்கா, திசாரா பெரேரா, சமரா கபுகேதரா, லசித் மலிங்கா, தினேஷ் சந்திமல் என ஜூலை 2017ல் இருந்து, டிசம்பர் 2017க்குள் இத்தனை கேப்டன்களை நீங்கள் மாற்றினீர்கள். அதன்பிறகு, தலைமை பயிற்சியாளர் சந்திகா என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்து, 2019 உலகக் கோப்பை வரை இலங்கை அணியின் கேப்டனாக தொடர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இலங்கை அணியின் நலனுக்காக நான் இதற்கு ஒப்புக் கொண்டேன். ஆனால், இப்போது தோல்விக்கு என்னை மட்டும் காரணமாக்கி நீக்கியுள்ளார்கள்." என்று ஏமாற்றத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், அக்டோபர் மாதம் 10ம் தேதி தொடங்கவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து ஏஞ்சலோ மேத்யூசை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நீக்கியுள்ளது. ஒரே வாரத்தில் கேப்டன் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டு, அணியில் இருந்து ஒதுக்கப்பட்டிருப்பது இலங்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடற்தகுதியை நிரூபிக்கவில்லை என்பதனால் மேத்யூஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால், அணியில் இருந்து உங்களை நீக்கப் போகிறோம் என்று முன்னரே மேத்யூசிடம் அணி நிர்வாகம் கூறியதாகவும், அதற்கு பதிலளித்த மேத்யூஸ், 'வேண்டுமானால் எனக்கு ஃபிட்ன்ஸ் டெஸ்ட் வையுங்கள்' என்று கோரிக்கை விடுத்து இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், அதனை கருத்தில் கொள்ளாத இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அவரை அணியில் இருந்து நீக்கியுள்ளது. இத்தனைக்கும், அவரது ஃபார்ம் கூட மோசமாக இல்லை, கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கூட, 97*, 79* ரன்கள் விளாசி நாட் அவுட்டாக திகழ்ந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை விளையாட்டு அமைச்சர் ஃபைசர் முஸ்தஃபா, 'இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் முடிவுகளில் நான் தலையிடுவதில்லை. ஆனால், அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று தெரியவந்தால், நிச்சயம் நீக்கப்படுவார்கள்' என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கேப்டன் பதவியில் இருந்து விலகிய மேத்யூசை மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்க வலியுறுத்தி, பின்னர் அவர்களே பதவி விலகச் சொல்லி, இப்போது அணியில் இருந்தும் நீக்கியிருப்பது ஏன்? என்பதே கிரிக்கெட் விமர்சகர்களின் கேள்வியாக உள்ளது.