கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய ஏஞ்சலோ மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி, வங்கதேசத்திடம் 137 ரன்கள் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானிடம் 91 ரன்கள் வித்தியாசத்திலும் மிக மோசமாக தோற்று வெளியேறியது.
கத்துக்குட்டி அணிகள் இல்லை என்றாலும், டாப் லெவல் அணிகள் என்று சொல்ல முடியாத வங்கதேசத்திடமும், ஆப்கனிடமும் இவ்வளவு அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது, இலங்கை முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரசிகர்கள் மிகக் கடுமையாக இலங்கை வீரர்களை ட்ரால் செய்த நிலையில், இலங்கை கேப்டன் மேத்யூசை நீக்கிவிட்டு, மீண்டும் தினேஷ் சந்திமலை கேப்டனாக்கியது இலங்கை கிரிக்கெட் நிர்வாகம். அதுமட்டுமின்றி, அணியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
அதற்கு காரணம் கூறிய இலங்கை தலைமை கோச் சந்திகா ஹதுருசிங்கா, "உடற்தகுதியை மேத்யூஸ் நிரூபிக்கவில்லை. அவரால் வேகமாக ஓடமுடியவில்லை. அவரால், பல வீரர்கள் ரன் அவுட் ஆக்கப்பட்டிருக்கின்றனர். சக வீரர்கள் ரன் அவுட் ஆக்குவதில் அவர் 'உலக சாதனை' படைத்திருக்கிறார்" என்றார்.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட்டின் தலைமை செயல் அதிகாரி ஆஷ்லே டி சில்வாவிற்கு, ஏஞ்சலோ மேத்யூஸ் மிகுந்த அதிருப்தியுடன் கடிதம் ஒன்றை எழுதினார்.
அதில், “இலங்கை அணியின் செயல்பாட்டிற்கு நான் பலியாடாக ஆக்கப்பட்டிருக்கிறேன். என் மீது பழி போட்டால், அது எனக்கு இழைக்கப்பட்ட துரோகம். தேர்வுக் குழுவினர் மற்றும் தலைமை கோச்சின் ஆலோசனைப்படி தான் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டது. தலைமை பயிற்சியாளராக சந்திகா நியமிக்கப்பட்ட பிறகு, அவர் என்னை சந்தித்து, 2019 உலகக் கோப்பை வரை இலங்கை அணியின் கேப்டனாக தொடர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இலங்கை அணியின் நலனுக்காக நான் இதற்கு ஒப்புக் கொண்டேன். ஆனால், இப்போது தோல்விக்கு என்னை மட்டும் காரணமாக்கி நீக்கியுள்ளார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க - மேத்யூஸ் எழுதிய கடிதத்தின் முழு விவரம்
மேத்யூஸின் இந்த கடிதம் இலங்கை கிரிக்கெட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மீண்டும் உடற்தகுதியை நிரூபித்த மேத்யூஸ், தற்போது நியூசிலாந்திற்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறார்.
நியூசிலாந்தின் வெல்லிங்டனில் முதல் டெஸ்ட் போட்டி, கடந்த 15ம் தேதி தொடங்கியது. இதில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை, முதல் இன்னிங்ஸில் 282 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து அணி 578 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டாம் லாதம் 264 ரன்கள் குவித்திருந்தார்.
அடுத்து, மூன்றாம் நாள் மாலை இரண்டாவது இன்னிங்சை ஆடத் தொடங்கிய இலங்கை அணி, 13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. நிச்சயம் இலங்கை, விரைவில் சுருண்டு படுதோல்வியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேத்யூஸ் - குசல் மென்டிஸ் பார்ட்னர்ஷிப், 'மெகா கட்டை ஆட்டம்' போட்டு, ஒட்டுமொத்த நியூசிலாந்து அணியையும் நொந்து போக வைத்திருக்கிறது.
மூன்று விக்கெட்டிற்கு பிறகு மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்ட இந்த ஜோடி, கடைசி இரண்டு நாட்கள் முழுவதும் பேட்டிங் செய்து ஆட்டத்தை டிரா செய்துள்ளது.
335 பந்துகளை சந்தித்த குசல் மெண்டிஸ் 141 ரன்களும், 323 பந்துகளை சந்தித்த மேத்யூஸ் 120 ரன்களும் எடுத்து, தோல்வியின் விளிம்பில் சென்ற அணியை மீட்டு, இரண்டு நாட்கள் முழுவதும் போராடி, டிரா செய்துள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/a167-300x217.jpg)
இருவரும் இணைந்து திரட்டிய 246 ரன்கள் தான், இலங்கை டெஸ்ட் வரலாற்றில், 2வது இன்னிங்ஸின் சிறந்த பார்ட்னர்ஷிப் ஆகும். அதுவும், நியூசிலாந்து மண்ணில், அந்த அணியின் அபாயகர பவுலிங்கை எதிர்கொண்டு, விக்கெட்டே விழாமல் இரண்டு நாட்கள் பேட்டிங் செய்வது என்பதெல்லாம், வேற லெவல்.
ஆனால், இதன் பிறகு தான் கிளைமேக்ஸ் சம்பவமே அரங்கேறியது.
போட்டி முடிந்தவுடன், இரண்டு நாட்கள் முழுவதும் பவுல் செய்து, ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் டயர்ட் ஆகிப் போன நியூசிலாந்து வீரர்கள் கிரவுண்டில் அப்படியே சோர்ந்து உட்கார, யாரும் எதிர்பார்க்காத வகையில் கிரவுண்டில் 10 முறை புஷ் - அப்ஸ் எடுத்தார் மேத்யூஸ்.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/a165-300x217.jpg)
அதன் மூலம், 'என்னை உடற்தகுதி இல்லாதவன் என்று சொன்னீர்கள்..., இதோ, இரண்டு நாள் எனது நான்-ஸ்டாப் ஆட்டம் + 10 புஷ்-அப்ஸ்' என்று தனது உடற் தகுதியை, போட்டியை மைதானத்தில் நேரில் பார்த்துக் கொண்டிருந்த அதே பயிற்சியாளர் முன்பு செய்து காட்டி, தனது பலத்தை நிரூபித்தார் மேத்யூஸ்.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/a166-300x217.jpg)
இச்சம்பவம், கிரிக்கெட் உலகில் தற்போது பெரும் பேசுபொருளாக அமைந்துள்ளது.