முடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம்? மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்?

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற தொடரில் இருந்து வீரர்கள் தேர்வில் தொடர்ந்து தவறுகள் நடக்கிறது. இதனால் அணிக்கு தான் பாதிப்பு

பெர்த் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. தோல்வி மட்டுமில்லாமல் விராட் கோலி – டிம் பெய்ன் மோதல், லோகேஷ் ராகுல் சொதப்பல் என சில நெகட்டிவ் ஷேட்களை இந்திய அணி இப்போட்டியில் சந்தித்தது. போட்டி முடிந்த பிறகு, ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் கைக் கொடுத்த போது, இந்திய கேப்டன் விராட் கோலி பெயர் அளவுக்கு மட்டுமே கைக் கொடுத்தார். ஆனால், அவரின் கண்களைப் பார்க்கவில்லை. இதை கவனித்த முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன், கோலி சில்லித்தனமாக நடந்து கொண்டதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ஜான்சன் கூறுகையில், ‘விராட் கோலி அப்படி செய்திருக்க கூடாது. டிம் பெயின் கைகொடுக்கும் போது பெயரளவுக்கு கைகொடுத்துவிட்டு கண்களை பார்க்கவில்லை. இது மரியாதை இல்லாத செயல், சில்லித்தனமாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, தொடக்க வீரர் லோகேஷ் ராகுலை டிக்கெட் எடுத்து இந்தியாவுக்கு அனுப்புங்கள் என்று காட்டமாக விமர்சித்து இருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற தொடரில் இருந்து வீரர்கள் தேர்வில் தொடர்ந்து தவறுகள் நடக்கிறது. இதனால் அணிக்கு தான் பாதிப்பு ஏற்படுகிறது. அணி வெற்றிப் பெற வேண்டுமானால் வீரர்கள் தேர்வு முறை சரியாக இருக்க வேண்டும்.

அணியின் செயல்பாட்டில் உள்ள ஓட்டைகளை அடைக்கும் வழிமுறைகளை நிர்வாகம் அறிய வேண்டும். ஸ்மித், வார்னே இல்லாத ஆஸ்திரேலிய அணியை வெல்ல முடியவில்லை என்றால் இதுகுறித்து சிந்தித்தே ஆக வேண்டும். தேர்வுக் குழு தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை.

பணக்கார அமைப்பான பி.சி.சி.ஐ.யால் 40 பேர் கொண்ட அணியை கூட அனுப்ப முடியும். ஏராளமான வீரர்கள் மீண்டும் வந்து உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும். முதலில் திருப்பி அனுப்பப்பட வேண்டிய வீரர் லோகேஷ்ராகுல். எஞ்சிய 2 டெஸ்டில் அவர் விளையாடக் கூடாது. ரஞ்சி கோப்பைக்கான கர்நாடக அணிக்கு வந்து ஆட வேண்டும்.

எஞ்சிய 2 டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறாவிட்டால் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பங்களிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்” என்று மிக காட்டமாக விமர்சித்து இருந்தார்.

ஆனால், பிசிசிஐ அறிவித்த 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து லோகேஷ் ராகுல் நீக்கப்படவில்லை. இருப்பினும், மாயன்க் அகர்வால், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

காயம் காரணமாக ப்ரித்வி ஷா வெளியேறியிருக்கும் நிலையில், மாயன்க் அகர்வால் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டிருப்பதால், மெல்போர்னில் வரும் 26ம் தேதி தொடங்கவுள்ள Boxing Day Test போட்டியில் ராகுலுக்கு பதிலாக மாயன்க் அகர்வால் பிளேயிங் XI-ல் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, முரளி விஜய்யும் சொதப்பி வருவதால், ஹனுமா விஹாரி – மாயன்க் அகர்வால் கூட்டணியை தொடக்கத்தில் களமிறக்க முடிவு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close