என்னைப்பற்றிய ரோஹித்தின் அபிப்ராயம் இப்போ மாறியிருக்கும்: முஹமது ஆமிர்!

ரோஹித் ஷர்மாவின் விமர்சனம் குறித்து மவுனம் கலைத்துள்ளார் பாகிஸ்தானின் முஹமது ஆமிர்...

ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதற்காக ஐந்து ஆண்டுகள் தண்டனையை அனுபவித்து கடந்த 2016-ஆம் ஆண்டு மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்தவர் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முஹமது ஆமிர். இன்றைய கிரிக்கெட்டில், பந்தை ஸ்விங் செய்வதில் கில்லாடி இந்த ஆமிர்.

குறிப்பாக, வலது கை பேட்ஸ்மேன்களை அவுட்டாக்குவது என்றால், இவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அதிலும், பிட்ச் இவருக்கு ஏற்றமாறு அமைந்துவிட்டால், எதிரணிக்கு இவர் மிகப்பெரிய அச்சுறுத்தல் தான். இவரை பாகிஸ்தான் அணியின் முன்னாள் ‘ஸ்விங் மன்னன்’ வாசிம் அக்ரமுடன் ரசிகர்கள் ஒப்பிட்டு புகழ்ந்து வருகின்றனர்.

முன்னதாக, 2016-ல் நடந்த டி20 ஆசியக் கோப்பை தொடரில், இந்திய தொடக்க வீரர் ரோஹித் ஷர்மாவை, முகமது ஆமிர் அவுட்டாக்கினார். இதன்பின், பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ரோஹித், “ஆமிர் ஒரு சாதாரண பவுலர்.. அவ்வளவுதான்!. பாகிஸ்தான் அணியில் அவரைப் போன்று இன்னும் ஐந்து பந்துவீச்சாளர்கள் அணிக்காக சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இதனால், ஆமிருக்கு கொடுக்கப்படும் பில்டப் ஓவரானது. ஒரு போட்டியில் அவர் சிறப்பாக செயல்பட்டதை வைத்துக் கொண்டு, அவரை அதிகமாக புகழ்வது இந்த நேரத்தில் சரியல்ல என்று நான் நினைக்கின்றேன். அவர் ஒரு சிறப்பான பந்து வீச்சாளர் தான். ஆனால், அதை அவர் ஒவ்வொரு ஓவரிலும் நிரூபிக்க இன்னும் தனது திறமையை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவரை வாசிம் அக்ரமுடன் மக்கள் ஒப்பிடுகிறார்கள். குறிப்பிட்ட நாள் அவருக்கு சிறப்பாக அமைந்தால், அவர் நல்ல பவுலர்” என்று கூறியிருந்தார்.

ரோஹித் ஷர்மாவின் இந்த கருத்து குறித்து இப்போது மவுனம் கலைத்துள்ளார் ஆமிர். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “ரோஹித் என்னைப் பற்றி கூறியது அவரது சொந்த கருத்து. அதற்கு அவருக்கு உரிமை உள்ளது. ஒருவேளை இப்போது என்னைப் பற்றிய அவரது அபிப்ராயத்தை அவர் மாற்றிக் கொண்டிருக்கலாம். இருப்பினும், என்னைப் பொறுத்தவரை ரோஹித் ஒரு அற்புதமான பேட்ஸ்மேன். இந்தியாவிற்காக அவரது சாதனைகள் பல. அதற்காக நான் அவரை மதிக்கிறேன்.

ஆனால், என்னைப் பற்றி யார் என்ன கூறினாலும், அதை நான் கண்டுகொள்வதில்லை. அது என் வேலையும் இல்லை. என் சிந்தனை எப்போதும் எனது பவுலிங் மீதும், அணிக்காக நான் என்ன செய்திருக்கிறேன் என்பதின் மீதே இருக்கும். மற்றவர்கள் என்னைப் பற்றி கூறும் கருத்துக்கள் குறித்து நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், எனக்கு அது மன அழுத்தத்தை தான் ஏற்படுத்தும். அதனால் நான் அவற்றை தவிர்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close