குஜராத் லயன்ஸ் அணிக்காக ஆடிவந்த பிரண்டன் மெக்குல்லம், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.
இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் நிலைமை குறித்து அதிகம் நாம் விளக்கி சொல்லத் தேவையில்லை. இதுவரை 11 போட்டியில் விளையாடியுள்ள அந்த அணி, 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. இன்னும் மூன்று போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது. இந்நிலையில், காயம் காரணமாக குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரண்டன் மெக்குல்லம் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து, குஜராத் - மெக்குல்லம் இடையேயான ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஏனெனில், அடுத்த ஆண்டு குஜராத் லயன்ஸ் மற்றும் புனே சூப்பர் ஜெயண்ட் அணிகளின் இரண்டாண்டு ஐபிஎல் ஒப்பந்தம் முடிவடைகிறது. அதற்கு பதிலாக, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் களத்தில் மீண்டும் இறங்குகின்றன.
எனவே, இனி மெக்குல்லம் குஜராத் அணிக்காக விளையாடமாட்டார். அடுத்த ஆண்டு வேறேதேனும் அணிக்கு விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தாண்டு குஜராத் அணிக்காக 11 ஆட்டங்களில் 319 ரன்கள் எடுத்துள்ளார் மெக்குல்லம். குஜராத் அணியில் தற்போது நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே மீதமுள்ளனர். டுவைன் ஸ்மித், ஆரோன் ஃபின்ச், ஜேம்ஸ் பால்க்னர், சிராக் சுரி ஆகிய வீரர்கள் உள்ளனர்.