பெங்களூருவில் இன்று நடைபெற்ற 'குவாலிஃபயர் 2' போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
டாஸ் வென்ற மும்பை அணி, கொல்கத்தாவை பெட் செய்ய பணித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் லின் 4 ரன்னிலும், சுனில் நரேன் 10 ரன்னிலும் அவுட்டானார்கள். இதன்பின் வந்த வீரர்களில் சூரியகுமார் யாதவ் மட்டும் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னில் அவுட்டானார்கள்.
மும்பையின் கரண் ஷர்மா சிறப்பாக பந்துவீசி, 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 2 ஓவர்கள் வீசிய பும்ரா, வெறும் 7 ரன்கள் கொடுத்து, 3 விக்கெட்டுகளை சாய்த்தார். முடிவில் அந்த அணி, 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதைத் தொடர்ந்து எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பைக்கு, தொடக்கத்தில் சில விக்கெட்டுகள் சரிந்தாலும், கேப்டன் ரோஹித் மற்றும் க்ருனல் பாண்ட்யாவின் பொறுப்பான ஆட்டத்தால், 14.3-வது ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 111 ரன்கள் எடுத்து வென்றது. கரண் ஷர்மாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இதையடுத்து, வரும் 21-ஆம் தேதி(ஞாயிறு) ஹைதராபாத்தில் நடக்கவுள்ள இறுதிப் போட்டியில், மும்பையும் புனேவும் மல்லுக்கட்ட உள்ளன.