சிறப்புக் கட்டுரை: இது முதல் போட்டியா அல்ல இறுதிப் போட்டியா? அதிர வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

ANBARASAN GNANAMANI

நேற்று இரவு சென்னை ரசிகர்களை கொண்டாட்டத்தின் எல்லைக்கு கொண்டுச் சென்ற சென்னை vs மும்பை போட்டி பற்றி அலசுவதற்கு முன்பு, சிஎஸ்கே பேட்டிங் கோச், மைக் ஹசிக்கு ஓரு ராயல் சல்யூட் வைக்க விரும்புகிறேன்… வைக்கிறேன்!. ஏன் தெரியுமா? அம்பதி ராயுடுவை தொடக்க வீரராக களமிறக்க முடிவு செய்ததற்காக.

என்னப்பா இது! நேத்து பிராவோ மூச்சப்போட்டு அடிச்சிருக்கார்… லாஸ்ட் ஓவர்ல ரன் கூட ஓட முடியாம கேதர் ஜாதவ் நின்னுக்கிட்டே அடிச்சு ஜெயிக்க வச்சிருக்கார், இத விட்டுட்டு அம்பதி ராயுடுவை ஓப்பனிங் இறக்குனதை பெருசா பேசுறீங்களே-னு கேட்குறீங்களா? ஆம்! நிச்சயம் ஹசியை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

நேற்று, நமது ஐஇதமிழ் உட்பட அனைத்து தரப்பிலும், மாதிரி சென்னை அணி வீரர்கள் பட்டியலை உருவாக்கினோம். ஆனால், யாருமே ராயுடுவை ஒப்பனராக சிஎஸ்கே களமிறக்கும் என எதிர்பார்க்கவில்லை. அதுவும், முரளி விஜய்யை வெளியே உட்கார வைத்து ராயுடுவை களம் இறக்குவார்கள் என நினைக்கவில்லை.

அம்பதி ராயுடு என்ன அவ்வளவு பெரிய வீரரா? ஆம்! சுருக்கமா அவரை பற்றி சொல்லி விடுகிறேன். கடைசி ஓவரில் 17 ரன் அடிச்சா தான் சென்னை ஜெயிக்கும்-னு சொன்னா, கண்ணை மூடிக்கிட்டு, ராயுடுவை இறக்கலாம். அந்தளவிற்கு நேர்த்தியாக சிக்ஸர்கள் அடிப்பதில் வல்லவர். டி20-ல் பேட்ஸ்மேன் ஒருவர் விரைவாக ரன் குவித்தால், ‘அதிரடி வீரர்’ என்று பொத்தாம் பொதுவாக அடையாளப்படுத்துவோம். கூர்ந்து கவனித்தால், அந்த அதிரடி வீரர்களில் சிலர், பந்தை எவ்வளவு தான் அடித்தாலும், பந்து தரை வழியாகத் தான் செல்லும். அதாவது, அவர்கள் அதிகம் பவுண்டரிகள் மூலம் தான் ரன்களை சேர்ப்பார்கள். ஆனால், சிலர் தான், பந்தை ஆகாய மார்க்கமாகவே விளாசுவார்கள். இவர்கள் சிக்ஸர்களை தூக்குவதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு கெட்டிக்காரர் தான் அம்பதி ராயுடு.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த போது, லோ ஆர்டரில் தான் ராயுடு இறக்கப்பட்டார். இதனால், அபார திறமை கொண்ட ராயுடுவால் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. இப்போது, சிஎஸ்கே-வில் அவருக்கு டாப் ஆர்டர் புரமோஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து அவர் ஒப்பனிங் வீரராக இறக்கப்பட்டால், அவர் நிச்சயம் இந்தத் தொடரில் சதம் அடிப்பார் என்பது உறுதி. அப்படி அவர் அடித்தால், இந்த கட்டுரையை அன்று நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

சென்னை நிர்வாகம் செயல்படுத்திய மற்றொரு அற்புதமான விஷயம், ஷர்துள் தாக்கூரை உட்கார வைத்து, தீபக் சாஹரை அணியில் சேர்த்ததும், இம்ரான் தாஹிரை அணியில் சேர்த்ததும் தான்.

சென்னை அணி நேற்று வெற்றிப் பெற்றதைத் தாண்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், இந்த மூன்று வீரர்களுக்கு வாய்ப்பளித்ததைத் தான் நான் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறேன். இவர்கள் மூவரால், சென்னை நேற்று ஜெயிக்கவில்லை. ஆனால், ஒருவேளை சென்னை பிளே ஆஃப் சென்றால், இவர்கள் மூவரும் முக்கிய காரணமாக இருப்பார்கள்.

ஷர்துள் தாக்கூரை விட பக்கா மெச்சூர்ட் பவுலராக இருக்கிறார் சாஹர். அதிலும், நேற்று அவர் வீசிய யார்க்கர்கள், ‘செம செம செம’ ரகம். நல்ல எதிர்காலம் உள்ளது இவருக்கு.

அதேபோன்று, நாம் ஆரம்பம் முதல் கூறி வரும் ஒரு விஷயம், இம்ரான் தாஹிரை அணியில் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்பது. அவரது ஆக்ரோஷம் நிச்சயம் அணிக்கு தேவை. ஆக்ரோஷம் மட்டுமல்ல, அவரது அக்யூரேட்டான ஸ்பின் பவுலிங்கும் அணிக்கும் தேவை. அவர் தனது பந்தை லேண்ட் செய்யும் விதமே மேஜிக்கானது. சென்னையில் நடந்த CSK vs CSK பயிற்சிப் போட்டியில், ரெய்னாவால் தாஹிர் பந்தை தொடக் கூட முடியவில்லை. ஷேன் வாட்சனுக்குலாம் ஸ்டம்புகள் பறந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எனவே, இவரது சேவை சிஎஸ்கேவுக்கு நிச்சயம் தேவை.

இதுதவிர, நாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொரு வீரர் ஒருவர் இருக்கிறார். ஆனால், அவர் சென்னை வீரர் இல்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் அறிமுகம் மாயன்க் மார்கண்டே. என்ன ஒரு ஸ்பின் பவுலிங்! என்ன ஒரு வேரியேஷன்ஸ்!. அதிலும், கூக்ளி வீசி தோனியை ஆட்டம் காண வைத்து அவுட்டாக்கிய விதம் ஹாசம்!. அடுத்தடுத்து வரும் போட்டிகளில் இவரை லட்ச கண்கள் கூர்ந்து கவனிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வாட்சன், தோனி, ரெய்னா நேற்று சரியாக விளையாடாமல் போனதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். இவர்கள், அடுத்துவரும் போட்டிகளை தங்களுக்கான நாளாக மாற்றுவார்கள் என நம்பலாம். ஜடேஜா… இவரை 7 கோடிக்கு சென்னை தக்க வைத்தது சிறந்த முடிவு தானா? என்ற கவலை ஆரம்பம் முதலே உள்ளது. நல்ல பீல்டர், நல்ல ஸ்பின் பவுலர். ஆனால், அவருக்கான அடையாளம் என்ன? அவர் ஒரு பேட்டிங் ஆல்-ரவுண்டராக தான் அணிக்குள் வந்தார். ஆனால், எத்தனைப் போட்டிகளில் அவர் பேட்டிங்கில் சாதித்துள்ளார்? அதனால் தான் 7 கோடிக்கு அவர் தகுதியானவரா? என்ற கவலை உள்ளது.

ஒட்டுமொத்தமாக, நேற்று சென்னை அணியின் ஆட்டத்தை பார்த்த பிறகு, இரண்டு விஷயங்கள் நம்மை கவலை கொள்ள வைத்தது.

சென்னை அணியின் பேட்டிங் பெயிலியர்,

மார்க் வுட் பவுலிங்.

பிராவோ தனியாளாக அணியை வெற்றிப் பெற வைத்ததால், சென்னை அணி மீதான விமர்சனம் குறைந்தது. பேட்டிங் பெயிலியர் நமக்கு கவலை தான் என்றாலும், இது முதல் போட்டி என்பதால், போகப் போக எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஆனால், இதைவிட நாம் கவலைக் கொள்ளக் கூடிய விஷயம், மார்க் வுட் 4 ஓவர்கள் வீசி 49 ரன்கள் கொடுத்தது தான். பிரதான வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட்டின் பவுலிங் பெருத்த ஏமாற்றம்!. இருப்பினும், அவருக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது.

ஒட்டுமொத்தமாக, சென்னை ‘சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தின் செயல்பாடு’ நேற்று அற்புதமாக இருந்தது என்றே என்னால் கூற முடியும். ஆனால், ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடு’ அதை மேட்ச் செய்ததா என்றால், கேள்விக்குறியே.

இதற்கு ஒரே சான்று, நேற்று தோனி கூறிய வார்த்தைகள் தான். ‘ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம் என்று நினைக்கவில்லை!’.

ஆனால் ஒன்றை நாம் உணர முடிந்தது. பிராவோ கடைசிக் கட்டத்தில் சிக்ஸர்கள் விளாச விளாச, மும்பை உரிமையாளர்கள் காட்டிய ரியாக்ஷன் இறுதிப் போட்டி ரேஞ்சுக்கு இருந்தது. கேப்டன் ரோஹித் ஷர்மாவே, இதை மறைமுகமாக விமர்சித்து இருந்தார். போட்டி முடிந்த பிறகு அவர் பேசுகையில், “இது முதல் போட்டி தான். இதோடு உலகம் ஒன்றும் முடிந்து போய்விடாது” என்றார். அந்தளவிற்கு, சென்னையிடம் தோற்று விடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தது மும்பை அணி.

நடப்பது 2018 ஐபிஎல்-ன் முதல் போட்டியா? அல்லது இறுதிப் போட்டியா? என்று நமக்கே ஒரு நொடி தலை சுற்றிவிட்டது!.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close