இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப் பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதற்கு முன் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கூட 3-2 என்ற கணக்கில் தான் ஆஸ்திரேலிய அணி தோனி தலைமையிலான இந்திய அணியிடம் கோப்பையை இழந்தது.
ஆனால், இம்முறை முதல் மூன்று போட்டிகளிலேயே தோற்று தொடரை இழந்துவிட்டது. இதனால், அந்த அணி மீது ஆஸி., ஊடகங்கள் கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகின்றன. ஸ்டீவ் ஸ்மித் ஒரு வீரராக சிறப்பாக செயல்பட்டாலும், கேப்டனாக இன்னும் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆஸி., முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய அணியை பொறுத்தவரை இலங்கையை அதன் மண்ணில் கிளீன் ஸ்வீப் செய்த பிறகு, தொடர்ந்து தனது வெற்றியை நிலைநாட்டி வருகிறது. தொடக்க வீரர் தவான் இல்லையென்றாலும், கிடைக்கும் வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்ளும் ரஹானே, தன்னால் முடிந்த வரை அணிக்கு தேவையான ஸ்கோரை அடித்துக் கொடுத்து விடுகிறார். அவ்வப்போது தடுமாறினாலும், ரோஹித் ஷர்மாவின் ஆட்டமும் அணிக்கு பலமுறை கைக்கொடுக்கிறது.
விராட் கோலி அணியின் தூணாக செயல்படுவதில் எந்த ஐயமும் இல்லை. களமிறங்கினால் 50 அல்லது 100 என்று ரன்களைக் குவிப்பதால், எதிரணிக்கு இவரது விக்கெட் எப்போதும் ‘கோல்டன் விக்கெட்’ தான்.
எப்பேற்பட்ட பவுலராக இருந்தாலும் பயப்படாமல் விளாசும் கேதர் ஜாதவ், பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் மெருகேறி வந்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் ‘சைமண்ட்ஸ்’ ஹர்திக் பாண்ட்யா, அற்புதமான பீல்டர் ‘கம்’ பேட்ஸ்மேன் மனீஷ் பாண்டே என இந்திய அணியின் பேட்டிங் கலவை சிறப்பாகவே உள்ளது. ஒருவர் விட்டாலும் மற்றொருவர் அணியை காப்பற்றிவிடுகிறார்.
என்ன தேடுறீங்க? தோனி பெயரைத் தானே! ‘தல’ இல்லாத டீமா!! ‘தல’ தோனியைப் பற்றி சொல்வதற்கு இனியென்ன இருக்கிறது. அந்த மனிதர் இருக்கும் வரை இந்திய அணிக்கு யாராலும் சூனியம் கூட வைக்க முடியாது.
அதேசமயம், ஆஸி., அணி தொடர்ந்து தடுமாறி வருவது ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தை கவலை அடையச் செய்துள்ளது. என்னதான் அவர்கள் உள்ளூரில் கில்லியாக இருந்தாலும், ஆசிய கண்ட தொடர் என்றாலே, அணிக்கு ‘கண்டம்’ வந்துவிட்டது போல் பதறுகிறார்கள். வங்கதேசத்திடம் டெஸ்ட் போட்டியில் தோல்விப் பெற்று, அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இந்தியவுக்கு சுற்றுப் பயணம் செய்து தோல்வி மேல் தோல்வி பெற்று துவண்டு போயிருக்கிறர்கள்.
இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி முடிந்த பிறகு, இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில், ஆஸி., அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கை டேக் செய்து ட்வீட் செய்திருந்தார். அதில், “மேட்! உங்களது ஓய்வு முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டு மீண்டும் நீங்கள் ஆஸி., அணிக்காக விளையாட வேண்டும் என நினைக்கிறேன். டாப் பேட்ஸ்மேன்களை உருவாக்கும் ஆஸ்திரேலியாவின் சகாப்தம் முடிந்துவிட்டதாக நான் உணருகிறேன். தரம் இல்லை” என்று அந்த ட்வீட்டில் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு தற்போது பதில் ட்வீட் செய்துள்ளார் மைக்கேல் கிளார்க். அதில் “இப்போதுதான் உங்களது ட்வீட்டை பார்த்தேன். என்னுடைய வயதான கால்கள் குளிர்சாதன அறையில் உட்கார்ந்து வர்ணனை செய்வதை என்ஜாய் செய்கிறது. ஆஸ்திரேலியர்கள் ஏதாவது செய்ய வேண்டும்!” என்று தெரிவித்துள்ளார்.
I have only just seen this buddy. These old legs of mine are enjoying the air conditioned commentary box ????✌️Aussies have some work to do! https://t.co/DnlTgdWPif
— Michael Clarke (@MClarke23) 25 September 2017
ஹர்பஜனின் கிண்டலுக்கு காரசாரமாக பதில் சொல்வார் என்று நினைத்தால், மிகவும் டம்மியான ஒரு ரிப்ளை கொடுத்திருக்கிறார் கிளார்க்.