மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கடந்த ஜூன் மாதம் 24-ஆம் தேதி தொடங்கியது. தொடக்கப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. அந்தப் போட்டி முதல், இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் பல சாதனைகளைப் படைத்து வருகிறார்.
அப்போட்டியில் அவர் அரை சதம் அடித்ததன் மூலம், மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 7 முறை அரைசதம் அடித்த ஒரே வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். முக்கியமாக, இது அவருக்கு 47-வது அரைசதமாகும். இதன் மூலம் மகளிர் கிரிக்கெட்டில் அதிக அரைசதம் அடித்த வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
அதேபோல், 100 போட்டிகளில் விளையாடி சிறந்த சராசரியை (52.27) வைத்துள்ள வீராங்கனையும் மித்தாலிதான். இந்த நிலையில், இன்று ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி விளையாடி வருகிறது. இப்போட்டியின் 28.4-வது ஓவரில் மித்தாலி 34 ரன்கள் எடுத்திருந்த போது, பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை எனும் புதிய சாதனையை படைத்துள்ளார். முன்னதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் சார்லோட் எட்வார்ட்ஸின் 5992 ரன்களே இதுவரை சாதனையாக இருந்தது. இதனை முறியடித்துள்ள மித்தாலி, 6000 ரன்களை கடந்த முதல் பெண் வீராங்கனை எனும் பெயரை பெற்றுள்ளார்.
தற்போது இந்திய அணி 36 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்துள்ளது. மித்தாலி ராஜ் 54 ரன்களுடனும், பூனம் 76 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.