2017-ஆம் ஆண்டில் உலகளவில் பல்வேறு துறைகளில் ஊக்கமளிக்கும் 100 பெண்களின் பட்டியலை பிபிசி ஊடகம் வெளியிட்டுள்ளது. இதில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மிதாலி ராஜ் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
’பிபிசி 100 பெண்கள்’ என்ற பெயரில் சவால்களை தகர்த்தெறியும் 100 பெண்களின் தொடரை
கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து பிபிசி வெளியிட்டு வருகிறது. இதில், உலகளவில் பல்வேறு துறைகளில் ஊக்கமளிக்கும் 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. விளையாட்டு, தொழில், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்துவரும் பெண்களை தேர்ந்தெடுத்து இதன் மூலம் பிபிசி அவர்களை கௌரவப்படுத்துகிறது. உலகளவில் பெண்களின் திறமைகளை கொண்டாடும் வகையில் பிபிசி இதனை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், 2017-ஆம் ஆண்டுக்கான 100 சாதனை பெண்களின் பட்டியலை பிபிசி சமீபத்தில் வெளியிட்டது. அதில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் மிகவும் முக்கியமான வீராங்கணையாக கருதப்படுபவர் மிதாலி ராஜ். கடந்த 18 வருடங்களாக கிரிக்கெட் விளையாட்டில் பல இன்னல்களையும் தாண்டி தொடர் சாதனைகளுக்கு சொந்தக்காரர் மிதாலி ராஜ். 2005 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில், விடா முயற்சியுடன் விளையாடி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலக கோப்பை போட்டிகளில் இறுதிச்சுற்று வரை செல்ல முக்கிய காரணமானவர் மிதாலி ராஜ். இதுவரை 181 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் மிதாலி ராஜ், கிரிக்கெட் துறைக்கு வர நினைக்கும் பல பெண்களுக்கு ஊக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார். ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதாக பார்க்கப்பட்ட கிரிக்கெட் விளையாட்டை பெண்களுக்குமானதாக மற்றவர்கள் பார்க்க வழிவகுத்தவர் மிதாலி ராஜ்.
‘பிபிசி 100 பெண்கள்’ பட்டியலில் மிதாலி ராஜ் தவிர்த்து, பிரேசிலை சேர்ந்த படகு போட்டி வீராங்கனை ஃபெர்ணான்டா நன்ஸ், ஹங்கேரியாவை சேர்ந்த தடகள வீராங்கனை நாதியா கோமனேசி, இங்கிலாந்தை சேர்ந்த கால்பந்து வீராங்கனை ஸ்டீஃப் ஹௌக்டன் உள்ளிட்ட விளையாட்டு வீராங்கனைகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
உலகளவில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்காக பல்வேறு பிரச்சார வடிவங்களில் குரல் கொடுத்து ஊக்கமளித்த 60 பெண்களின் பெயர்கள் இப்பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன.