இந்தியா அணியின் மூத்த பந்து வீச்சாளர்களாக இருக்கும் நானும், முகமது ஷமியும் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். நாங்கள் இருவரும் நீண்ட காலத்திற்கு பிறகு இந்திய அணியில் விளையாடுகிறோம். இதனால், பெங்களூருவில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் 15-20 ரன்கள் கூடுதலாக கொடுத்துவிட்டோம்.
இதுகுறித்து நாக்பூரில் நாளை நடைபெறவுள்ள இறுதி ஒருநாள் போட்டிக்கு முன் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் உமேஷ் யாதவ் பேசுகையில், " இந்திய அணி வீரர்களின் ஓய்வறை தற்போது நன்றாக தான் உள்ளது. நாங்கள் அந்த ஆட்டத்தில் தோற்றுவிட்டோம் என்பதை உணருகிறோம். ஆனால், பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினார்கள்.
நானும் முகமது ஷமியும் நீண்ட நாட்கள் கழித்து அணியில் விளையாடினோம். நாங்கள் 15-20 ரன்கள் அதிகமாக கொடுத்துவிட்டோம். அதை நாங்கள் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். அணியின் மூத்த பவுலர்கள் என்ற அடிப்படையில் எங்களுக்கு அதிக பொறுப்பு உள்ளது. அணி எங்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறதோ அதை நாங்கள் கொடுக்க வேண்டும். டெத் ஓவர்களில் நான் மற்றும் ஷமியும் மிகுந்த பொறுப்போடு பந்துவீச வேண்டும்" என்றார்.
நாளை இந்தியாவும் - ஆஸ்திரேலியாவும் நாக்பூரில் இறுதி ஒருநாள் போட்டியில் மோதுகின்றன. ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றுவிட்டது. பெங்களூருவில் நடந்த ஒருநாள் போட்டியில் பெற்ற தோல்வியின் மூலம், இந்தியாவின் தொடர் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது.
மேலும் உமேஷ் கூறுகையில், "மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாட நான் ஃபிட்டாக இருக்கிறேன். டெஸ்ட் போட்டிகளை விட அதிகமாக ஒருநாள் போட்டிகள் தான் நடக்கிறது. ஆனால், எனக்கு அதிகமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட பிடிக்கின்றது. அதில் சவால்கள் அதிகம். குறிப்பாக, மெதுவான ஆடுகளங்களில் விக்கெட்டுகள் வீழ்த்துவது என்பது ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு மிகவும் கடுமையான சவாலாகும்.
இதுபோன்ற ஆடுகளங்களில் அதிகம் விளையாடுவதன் மூலம் நமது தன்னம்பிக்கை அதிகரிக்கும். டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை நினைத்து எப்போதும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மூன்று விதமான கிரிக்கெட்டிலும் ஆடுவதையே நான் விரும்புகிறேன்.
அணியில் இடம் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் எப்போதும் ஒரு வேகப் பந்து வீச்சாளர் அணிக்காக விளையாட தயாராக இருக்க வேண்டும். டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை குறைவு என்பதால், மற்ற ஓய்வு நேரங்களில் எப்போதும் பயிற்சி மட்டுமே எடுத்துக் கொண்டிருப்பேன். ஏனெனில், ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு பிராக்டீஸ் என்பது நல்லது.
ஆனால், மேட்ச் பிராக்டீஸ் என்பது அவசியமானது. நீங்கள் பயிற்சியை விட்டுவிட்டால், போட்டிக்கு ஏற்றவாறு உங்களது உடல் ஒத்துழைக்காது.
வலைப் பயிற்சியில் ஈடுபடுவது சிறந்தது. பயிற்சிதான் செய்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணருவீர்கள். ஆனால், நமது பந்துவீச்சு எப்படி உள்ளது என்பது உங்களுக்கு தெரியாது. உங்களது அணியைச் சேர்ந்த பேட்ஸ்மேனுக்கு பந்து வீசிப் பழகுவதும், எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசுவதிலும் வித்தியாசம் உள்ளது. ஆனால், இதுபோன்ற சவால்களை நான் விரும்புகிறேன்" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.