டெல்லியில் கடந்த நவம்பர் 1-ஆம் தேதி நடந்த நியூசிலாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டியோடு, ஆசிஷ் நெஹ்ரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து, மொஹம்மத் சிராஜூக்கு இந்திய அணியில் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில், நேற்று ராஜ்கோட்டில் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணியில் சிராஜ் சேர்க்கப்பட்டார்.
ஆனால், அவருக்கு எதிர்பார்த்தது போன்று நேற்றைய போட்டி அமையவில்லை. தனது முதல் சர்வதேச விக்கெட்டாக வில்லியம்சனை வீழ்த்தினாலும், 4 ஓவர்கள் வீசிய சிராஜ், 53 ரன்களை விட்டுக் கொடுத்தார். கப்தில், மன்ரோ ஆகியோர் இவரது ஓவரில் சிக்சரும், பவுண்டரிகளுமாக விளாசினர்.
நேற்றை போட்டிக்கு முன் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இவருக்கு தொப்பி அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த வருடத்தில், கோலியின் தலைமையின் கீழ், அறிமுகமான பல பவுலர்களில் ஒருவராக சிராஜும் விளங்கினார். ஆனால், முதல் போட்டியில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. குல்தீப் யாதவ் மற்றும் யுவேந்திர சாஹல் ஆகியோர் மட்டும் தங்கள் இடங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று போட்டி தொடங்கும் முன், இரு நாடுகளின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, இந்திய தேசிய கீதம் ஒலித்து முடிந்த பின், உணர்ச்சி பெருக்கால் சிராஜ் கண் கலங்கினார். இந்த படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே இவரது நீண்ட நாள் கனவாக இருந்தது. அது நிறைவேறியதால், தேசிய கீதம் ஒலித்த பின் சிராஜ் கண்ணீர் சிந்தியது அனைவரையும் நெகிழ வைத்தது.
சிராஜின் தந்தை ஆட்டோ டிரைவர். இந்தாண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக, ரூ.2.6 கோடிக்கு சிராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன்பின் அவர் அளித்த பேட்டியில், "கடந்த 30 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டிவந்த எனது தந்தை முகமது கோஸ், இனி ஆட்டோ ஒட்டி சிரமப்பட வேண்டியதில்லை என்றாலும், அவர் உடனடியாக அதனை நிறுத்திக்கொள்ள முடியாது என்று கூறி வருகிறார். அவரை எளிதாக தன்னால் சமாதமானப்படுத்திவிட முடியும்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.