ச. மார்ட்டின் ஜெயராஜ்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) டி.20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008ம் ஆண்டு முதல் கோலாகலாக அரங்கேறி வருகிறது. எல்லா ஆண்டுகளும் இந்திய மண்ணில் நடைபெறும் இந்தத் தொடர் சில பல காரணங்களில் வெளிநாடுகளிலும் நடந்துள்ளது. இந்த தொடரில் எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக வலம் வருகிறது. 4 முறை சாம்பியன் பட்டத்தை பெற்றதோடு, அதிக முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணியாகவும் இருந்து வருகிறது.

சென்னை அணியின் வெற்றியே அதன் வீரர்களின் தேர்வில் தான் உள்ளது. சீனியர் மற்றும் அனுபவம் இல்லாத வீரர்களை கொண்ட கலவையையாகவும், ஆடும் லெவனில் இடம் பிடிக்கும் ஒவ்வொரு வீரருக்கும் ஏற்ற பேக்-அப் வீரர்களை கொண்ட அணியையே எப்போதும் அணி நிர்வாகம் தேர்வு செய்யும். அணியின் உரிமையாளர்களும், பயிற்சியாளர்களும் அணியில் இணையும் இளம் வீரர்களை அடுத்தடுத்த சீசனில் களமிறக்க அவர்களை பட்டை தீட்டி மெருகேற்றுவார்கள்.
அதேநேரம், சீனியர்கள் வீரர்களுக்கு களத்தில் தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்த முழு சுதந்திரம் கொடுப்பார்கள். அவர்களுக்கு பிடித்த இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்பி மாபெரும் சாதனைகளை படைக்க உதவுவார்கள். கேப்டன் தோனி உட்பட அணி நிர்வாகத்தின் இதுபோன்ற நிர்வாகத் திறனால், பிற அணிகளில் அல்லது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் பின்னடைவை சந்தித்த வீரர்கள் கூட இங்கு வந்து கலக்குவார்கள். அவ்வகையில், சி.எஸ்.கே-வில் இணைந்த பிறகு ஐ.பி.எல்-லில் ஜொலித்த 5 வீரர்கள் குறித்து இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.
மைக்கேல் ஹஸ்ஸி
ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரரான மைக்கேல் ஹஸ்ஸி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 முதல் 2013 வரை விளையாடினார் மற்றும் 2015ல் திரும்பினார். சென்னையில் இணையும் முன் அவரது சொந்த நாட்டு அணியில் அதிக முக்கியத்துவம் பெறாத வீராகவே அவர் காணப்பட்டார். இங்கு இணைந்த பிறகு அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஏறுமுகம் தான்.

சென்னை அணிக்காக மட்டும் அவர் 1700 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். சென்னை அணி கோப்பையை முத்தமிட்ட 2010 மற்றும் 2011 ஆண்டுகளில் அணியின் முக்கிய வீரராக இருந்தார். 2013 ஆண்டில் 733 ரன்கள் குவித்து அதிக ரன்களை குவித்த வீரருக்கான ஆரஞ்சு கேப்-பை வசப்படுத்தினர். அவரை ரசிகர்கள் “மிஸ்டர் கிரிக்கெட்” என்ற செல்லப்பெயருடன் அழைப்பார்கள்.
ஷேன் வாட்சன்
ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2008ம் ஆண்டில் அறிமுகமான வாட்சன் சிறப்பான சீசனை பெறவில்லை. 2013ல் அவர் சென்னை அணிக்கு எதிராக சதம் அடித்து மிரட்டினார். அதுமுதல் அவர் டாப் வீரராக மாறினார். 2014ல் அந்த அணியை வழிநடத்திய அவர் அதிக சம்பளம் பெற்ற முதல் வெளிநாட்டு வீரரனார். 2016ல் ராஜஸ்தானுக்கு தடை விதிக்கப்பட்டது. வாட்சனும் சர்வதேச கிரிக்கெட்டில் சரிவைக் கண்டார்.

இதன்பிறகு, 2018ல் அவர் சென்னை அணிக்காக களமிறங்கினார். இந்த சீசனில் 2 சதம் அடித்து மிரட்டிய அவர் 555 ரன்கள் குவித்து இருந்தார். சென்னை சாம்பியன் பட்டமும் வென்றது. 2019ல் சென்னை அணி தரப்பில் அதிக ரன்கள் (398 ரன்கள்) எடுத்தவராக இருந்தார். மும்பை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் அவர் ரத்தம் சொட்ட சொட்ட விளையாடியது இன்றளவும் மறக்க முடியா தருணமாக உள்ளது. 2020 சீசனிலும் விளையாடிய அவர் சென்னை அணிக்காக மொத்தமாக 953 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்.
ராபின் உத்தப்பா
ஐ.பி.எல் தொடருக்கான எல்லா சீசனிலும் விளையாடிய உத்தப்பா 2014ல் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்ற போது முக்கிய வீரராக இருந்தார். அந்த சீசனில் அதிக ரன்கள் (660 ரன்கள்) குவித்த வீரருக்கான ஆரஞ்சு கேப்-பை வசப்படுத்தினார். அதன்பிறகு, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த அவர், 2021ல் சென்னை அணியில் இணைந்தார்.

சென்னை அணியில் முன்னணி வீரராக இருந்த உத்தப்பா சீசன் முழுதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக, அவரது முன்னாள் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-க்கு எதிரான இறுதிப்போட்டியில் 23 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து சென்னை அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அவர் சென்னை அணி குறித்து எங்கும், எப்போதும் நெகிழ்ந்து பேசுவார்.
அம்பதி ராயுடு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அம்பதி ராயுடு 2018ல் இணைந்தார். அப்போது முதல் இந்த சீசன் வரை அவர் முக்கிய வீரராகவே வலம் வருகிறார். சர்வதேச அரங்கில் அவர் ஜொலிக்க தவறினாலும் சென்னை அணியில் விளையாடி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். மேலும், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரராகவும் அவர் இருந்து வருகிறார்.

சென்னை அணி 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்ற போது அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். இதுவரை 1000 ரன்களுக்கு மேல் அடித்துள்ள அவர் நடப்பு சீசனில் சென்னை அணியின் இம்பாக்ட் பிளேயராக களமாடி அதிரடி காட்டி வருகிறார்.
அஜிங்க்யா ரஹானே
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் எந்த அளவிற்கு ஏற்றத்தை கண்டரோ அதே அளவிற்கு இறக்கத்தையும் கண்டார் ரஹானே. அவர் ராஜஸ்தான் ராயல்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். 2012ல் ராஜஸ்தான் அணியில் களமாடிய அவர் அந்த சீசனில் 550 ரன்கள் வரை குவித்தார். 2012-16 ஆண்டுகளில் ரஹானே போட்டியின் வரலாற்றில் மிகவும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களில் ஒருவராக தனது நிலையை உறுதிப்படுத்தி இருந்தார்.

ஆனால், 2017, 18 ஆண்டுகளில் அவரது பேட்டிங்கில் பெரும் சரிவைக் கண்டார். மறுபுறம், கேப்டன்சி சுமை அவரை எழுச்சி பெற விடவில்லை. இதனால், அந்த அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார் ரஹானே. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய டெஸ்ட் அணியில் தவறாமல் இடம் பிடித்த அவர் 2021ம் ஆண்டில் ஃபார்ம் அவுட் ஆகினார். இந்த ஆண்டில் உள்ளூர் தொடரில் அவர் சிறப்பாக ஆடிய போதும் அவரை அணி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக நடந்த ஏலத்தில், அவரை சென்னை அணி அவரது அடிப்படை விலையான 50 லட்சத்திற்கு வாங்கியது. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமாடிய ரஹானே தனது திறனை நிரூபித்துக் காட்டினார். கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் அணியின் தரப்பில் அதிகபட்சமாக 71 ரன்கள் எடுத்து மிரட்டினார். சென்னை அணிக்காக இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள அவர் 18 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களை பறக்கவிட்டு 209 ரன்கள் எடுத்துள்ளார்.

அவரது தற்போதைய ஸ்ட்ரைக் ரேட் 199.04 ஆக உள்ளது. குறைந்தபட்சம் 100 பந்துகளை எதிர்கொண்ட ஸ்ட்ரைக் ரேட் அதிகம் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் (199.04) ரஹானே முதலிடத்தில் உள்ளார். இத்தகைய அதிரடியான ஆட்டத்தின் மூலம் அவருக்கு வருகிற ஜூன் 7ம் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போடிக்கான இந்திய அணியில் இணையும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவருக்கு நிச்சயம் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil