ஒரு நாள் போட்டிகளில் அதிக ஸ்டம்பிங் செய்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் டோனி சாதனை படைத்துள்ளார். இந்தியா இலங்கை அணிகளையே கொழும்புவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5-வது ஓருநாள் போட்டியில் டோனி இந்த சாதனையை நிகழ்த்தினார்.
ஒருநாள் போட்டிகளில் 100 ஸ்டம்பிங் செய்த முதல் வீரர் என்ற சாதனையை டோனி படைத்துள்ளார். முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் குமார் சங்கக்கரா 404 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 99 ஸ்டம்பிங் செய்திருந்தார். இந்த நிலையில், அந்த சாதனையை டோனி முறியடித்துள்ளார். 45-வது ஓவரை சாஹல் வீசிய போது, இலங்கை வீரர் அகிலா தனன்ஜெயாவை ஸ்டம்பிங் செய்ததன் மூலம் டோனி இந்த மைல்கல்லை எட்டினார்.
இந்த தொடரின்போது 300-வது ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் 6-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார் டோனி. முன்னதாக, முகமது அசாருதின், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, யுவராஜ் சிங் ஆகியோர் 300 போட்டிகளை கடந்து விளையாடியுள்ளனர்.
மேலும், அதிக முறை நாட்-அவுட் வீரர் என்ற சாதனையும் டோனி படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு எதிரான 4-வது போட்டியின் போது மகேந்திர சிங் டோனி ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை நாட்அவுட்-ஆக இருந்தவர்களின் பட்டியலில் மகேந்திர சிங் டோனி முதலிடம்(73 முறை) பிடித்தார். தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷான் பொல்லாக், இலங்கை அணியின் முன்னாள் வீரர் சமிந்தா வாஸ் ஆகியோர் முதலிடத்தில் முதலிடத்தில்(72 முறை) இருந்து வந்தனர். இந்தநிலையில், டோனி அவர்களை பின்னுக்கு தள்ளினார்.
இதேபோல, இந்தபோட்டியில் ஆங்கிலோ மேத்திஸ் கேட்ச்சை பிடித்ததன் மூலம் ஒருநாள்போட்டிகளில் டோனி தனது 283-வது கேட்ச்சை பதிவு செய்தார். அதிக கேட்ச் பிடித்தவர்களின் பட்டியலில் டோனி நான்காவது இடத்தில்இருகிக்கிறார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட்(417), தென் ஆப்ரிக்க அணியின் மார்க் பவுச்சர்(402), இலங்கையின் குமார் சங்கக்காரா(383) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.