நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில், தோனியின் செயல்பாடு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. சில போட்டிகளில் அவருக்கு பேட் செய்ய பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், வாய்ப்பு கிடைத்த போட்டிகளில் அவர் சொதப்பினார். குறிப்பாக, ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில், அணியின் வெற்றிக்கு 65 பந்துகளில் 130 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களமிறங்கிய தோனி, முதல் 21 பந்தில் 21 ரன்களே எடுத்தார். தோனி மீதான ரசிகர்களின் அதிருப்திக்கு இதுதான் முக்கிய காரணமாக இருந்தது. இதனால், சமூக தளங்களில் சில ரசிகர்களும் சரி, மூத்த கிரிக்கெட் வீரர்களும் சரி, தோனியை விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து நேற்றைய இறுதிப் போட்டி வெற்றிக்குப் பிறகு, இந்திய கேப்டன் விராட் கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மிகவும் காட்டமாக கோலி பதில் அளித்தார். அவர் கூறுகையில், "முதலில், அனைவரும் ஏன் எப்போதும் தோனியையே குறி வைக்கின்றீர்கள்? சத்தியமாக இது எனக்கு புரியவில்லை. ஏனெனில், அவருக்கு 36 வயதாகிறது. இதனால் தான் தொடர்ந்து அவரை கார்னர் செய்கிறார்கள். நான் தொடர்ந்து 3 இன்னிங்ஸில் ஒன்றும் அடிக்கவில்லை என்றாலும் கூட, என்னை யாரும் குறை சொல்லப் போவதில்லை. காரணம், எனக்கு இன்னும் 35 வயதாகவில்லை.
இரண்டாவது டி20 போட்டியில், 197 என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி அவரது இடத்தில் யார் களமிறங்கினாலும் அடிப்பது சிரமம் தான். ஹர்திக் பாண்ட்யா கூட அன்று ஒன்றும் அடிக்கவில்லை. ஆனால், நீங்கள் ஏன் தோனியை மட்டும் குறை சொல்கிறீர்கள்? ஒரேயொருவரை மட்டும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவது என்பது நல்லதல்ல. அவர் அன்று களமிறங்கும் போது, தேவைப்படக்கூடிய ரன் ரேட் 9.5-க்கும் மேல் இருந்தது. மேலும், பிட்சின் தன்மையும் மாறியிருந்ததால், புதிய பந்தில் அடிப்பதில் நிறையவே சிரமம் இருந்தது.
எப்போதும், பின்வரிசை வீரர்களை விட, முன்வரிசை வீரர்கள் சிறப்பாக விளையாட முடியும். ராஜ்கோட் மைதானம், இரண்டாம் பாதியில் மிகவும் ஈரத்தன்மையாக மாறிவிட்டது. இவையனைத்தையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.
தோனி இப்போதும் மிகவும் ஃபிட்டாக இருக்கிறார். அனைத்து ஃபிட்னஸ் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். அவரால், கீப்பிங், பேட்டிங் என இரண்டிலும் களத்தில் சிறப்பாக செயல்பட முடியும். இதற்கு முன் நடந்த இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில், தோனி மிகச்சிறப்பாக விளையாடினார் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அவர் எந்த இடத்தில் இறங்குகிறார் என்பது அணி நிர்வாகத்துக்கும் தெரியும், வீரர்களுக்கும் தெரியும். மக்கள் தவறான கண்ணோட்டத்துடன் இந்த விஷயத்தை அணுகுவது குறித்து நாங்கள் கவலைப்படப் போவதில்லை. களத்தில் விளையாடுபவர்களுக்குத் தான், பிட்ச் எப்படி இருக்கிறது, நிலைமை தற்போது எப்படி இருக்கிறது என்பது குறித்து தெரியும், அதனால், அவரைப் பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை. தனது ஆட்டம் குறித்தும், தனது பங்கு குறித்தும் அவர் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்.
டெல்லியில் அவர் அடித்த சிக்ஸரை, போட்டி முடிந்த பின், ஐந்து முறை போட்டுக் காட்டிக் கொண்டே இருந்தார்கள். அதை அனைவரும் கொண்டாடினீர்கள். ஆனால், அடுத்த ஒரு போட்டியில் அவர் அடிக்கவில்லை என்பதற்காக, அவரது எதிர்காலம் குறித்து உடனே கேள்வி எழுப்புகிறீர்கள். மக்கள் இன்னும் அமைதி காக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். தனது வாழ்க்கையில் பல கிரிக்கெட் வீரர்களை பார்த்தவர் தோனி. அவருக்கு அனைத்தும் தெரியும்" என்று நீண்ட நெடியுடன் கூடிய பதிலை விராட் கோலி அளித்தார்.