ஐபிஎல் ஏலத்தில் தோனியை இழுக்க போர் நடக்கும்: கிரிக்கெட் வல்லுநர்கள்

ஐபிஎல் போட்டிகளில் அதிகம் விரும்பும் வீரர்களில் தோனி முதல் 5 இடங்களில் இருக்கிறார்

மேட்ச் ஃபிக்சிங் தடை காரணமாக இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் அடுத்த ஆண்டு (2018) ஐபிஎல் தொடரில் பங்கேற்ற இருக்கின்றன.

அப்படியெனில், தோனி மீண்டும் ஐபிஎல் ஏலத்திற்கு வருகிறார் என்றே அர்த்தம். இதனால் 2018-ல் நடக்கவிருக்கும் ஏலத்தின் போது ஐபிஎல் அணிகளுக்கிடையே தோனியை தங்கள் பக்கம் இழுக்க கடும் போர் ஏற்படும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், சிஎஸ்கே மற்றும் ஆர்ஆர் அணிகள் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகத்திடம், தங்களது சில பழைய வீரர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டி அனுமதி கேட்டுள்ளன. அவர்களை ஏலத்தில் விடவேண்டாம் என்றும் இரு அணிகள் கேட்டுக் கொண்டுள்ளன.

ஐபிஎல் தொடர் தொடங்கிய போது, தோனி தான் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக இருந்தார். அதன்பின், 2016-ஆம் ஆண்டு நடந்த ஏலத்தின் போதும் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக தோனி இருந்தார். 12.5 கோடி ரூபாய்க்கு ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணி தோனியை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டிக்குப் பிறகு, இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் சிஎஸ்கே அணியின் உரிமையாளருமான என்.ஸ்ரீனிவாசனை தோனி சந்தித்துப் பேசியிருப்பது கவனிக்க வேண்டிய விஷயமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நிகில் சோப்ரா அளித்துள்ள பேட்டியில், “ஐபிஎல் போட்டிகளில் அதிகம் விரும்பும் வீரர்களில் தோனி முதல் 5 இடங்களில் இருக்கிறார். அவரிடம் லீடர்ஷிப் குவாலிட்டீஸ் உள்ளது. எந்த அணியாக இருந்தாலும் அதில் மேட்ச் வின்னராக தோனி இருப்பார். சந்தேகமே இல்லாமல், தோனியின் தலைமைப் பண்பிற்காக பல அணிகள் அவரை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கும். குறிப்பாக, ஐபிஎல் அணிகளில் பெரும்பாலான வீரர்கள் இந்திய வீரர்களாக இருப்பதால், ஒரு சிறந்த இந்திய வீரரையே கேப்டனாக நியமிக்கவே எந்த அணியும் விரும்பும். இதனால், அடுத்த ஐபிஎல் ஏலத்தில் பெரும்பாலான அணிகள் தோனி பக்கம் தான் நிற்கும்” என்றார்.

அதேபோல், வர்த்தக உத்தி வல்லுநர் ஹரீஷ் பிஜ்னூர் அளித்த பேட்டியில், “இரண்டு ஆண்டுகால தடை காரணமாக சிஎஸ்கே அணியின் பிராண்ட் மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன். இதனால், இழந்த அந்த பிராண்டை மீட்கவும், மீண்டும் அந்த மேஜிக்கை நிகழ்த்தவும், ஏலத்தின் போது சிஎஸ்கே நிர்வாகம் தோனியை மீட்பதில் குறியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என் ஸ்ரீனிவாசன் பேசுகையில், “நீங்கள் சிஎஸ்கே ரசிகராக இருந்தால், 2018-ஆம் ஆண்டு மீண்டும் தோனி தலைமை வகிப்பதை பார்க்க விரும்புவீர்கள். தோனி மஞ்சள் ஜெர்சி அணிந்து நடக்க வேண்டும் என விரும்புவீர்கள். நிச்சயம் நீங்கள் நினைப்பது நடப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளது” என்று கூறியுள்ளார்.

×Close
×Close