இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டி20 போட்டி செஞ்சூரியின் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 188 ரன்கள் குவித்தது. இங்கே, 'குவித்தது' என்று சொல்வதற்கு முக்கிய காரணம், ஒருகட்டத்தில் இந்திய அணி ஐந்து ஓவர்களில் 45-3 என்ற நிலைமையில் இருந்தது. குறிப்பாக, கேப்டன் விராட் கோலி 1 ரன்னில் அவுட்டாகி இருந்தார். இப்படியொரு நிலையில் இருந்து தான் இந்தியா, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.
மனீஷ் பாண்டே 48 பந்துகளில் 79 ரன்களும், தோனி 28 பந்துகளில் 52 ரன்களும் விளாசி இறுதி வரை களத்தில் இருந்தனர். தோனியின் ஸ்டிரைக் ரேட் 185.71. ரொம்ப நாளைக்கு அப்புறம் தோனி ரசிகர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் எட்டிப் பார்த்தது.
ஆனால், அதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா எந்தவித நெருக்கடியும் இன்றி, 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 189 ரன்கள் எடுத்து வென்றது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் கிளாசீன் 30 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார். கேப்டன் டுமினி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்திய தரப்பில் யுவேந்திர சாஹல் வீசிய 4 ஓவர்களில் 64 ரன்கள் குவித்தனர் தென்.ஆ.வீரர்கள். எகானமி 16. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டி20 போட்டியில், அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த ஸ்பின்னர் என்ற மோசமான சாதனையை சாஹல் படைத்துள்ளார். இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா சமன் செய்துள்ளது. இறுதிப் போட்டி கேப்டவுனில் வரும் 24ம் தேதி நடைபெறுகிறது.
இந்தியா நேற்று தோற்றத்தில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஒன்றும் இல்லை. ஆனால், 'கேப்டன் கூல்' என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி, பேட்டிங் செய்துக் கொண்டிருந்த போது மனீஷ் பாண்டேவை சரமாரியாக திட்டிய சம்பவம் தான் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதாவது, இந்தியா முதலில் பேட்டிங் செய்கையில் இறுதி ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட பாண்டே, பந்தை மிட் ஆனில் அடித்து விட்டு, தோனியை கவனிக்காமல் ரன்னிங் கொடுத்தார். இதில், செம காண்டான தோனி, மனீஷ் பாண்டேவை பார்த்து சரமாரியாக திட்டினார். தோனியின் இத்தனை ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில், இப்படி அவர் ஆக்ரோஷமாக.., அதுவும் வெளிப்படையாக கோபப்பட்டதை யாரும் பார்த்திருக்க முடியாது. அதற்கு அடுத்த பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்ட தோனி, மேற்கொண்டு இரண்டு பவுண்டரிகளையும் விளாசினார்.
களத்தில் கோபம் வரும் போதெல்லாம், அதை முடிந்த அளவு வெளிக்காட்டாமல் இருப்பதாலேயே 'கேப்டன் கூல்' என்று அவரை அழைப்பதுண்டு. ஆனால், தல தோனியின் நேற்றைய செயல்பாடு நமக்கே ஷாக் தான்.
அந்த வீடியோ இதோ,