மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு தண்டனை அறிவித்த போது, வட இந்தியாவில் இருந்து வந்த வார்த்தைகள் இவை... 'ஓ! அப்போ இப்படித் தான் இத்தனை ஆண்டுகள் சென்னை அணி ஜெயித்ததா?'.
அதிலும், இந்திய கிரிக்கெட் போர்டை கையில் வைத்திருந்த என்.ஸ்ரீனிவாசன் - தோனியின் நட்பு அனைவரும் அறிந்ததே. ஆனால், தடைக்கு பின்னர், ஸ்ரீனிவாசனால் தான் தோனி, இந்திய அணியின் கேப்டனாகவே நீடித்தார் என்று கூறினர். ஸ்ரீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் தான் மேட்ச் பிக்ஸிங் புகாரில் சிக்கிய நபர். அதன்பின், தோனியும் இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விலக, கோலி அதிகாரத்துக்கு வந்து இன்று உச்சத்தில் உள்ளார்.
சென்னை அணி அவ்வளவு தான்... தோனி அவ்வளவு தான் என என்னதான் கொக்கரித்தாலும், இரண்டு ஆண்டு தடைக்குப் பின்னர், படு உற்சாகமாய் களமிறங்கி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சரியாக 3 ஆண்டுகளுக்குப் பின்னர், கிரிக்கெட் போட்டியில் தோனி மீண்டும் 'டாஸ்' போட உள்ளார். கேப்டனாக அவரைப் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
பேட்டிங் கோச் மைக் ஹசி, பவுலிங் கோச் லக்ஷ்மிபதி பாலாஜி ஆகியோர் தங்கள் பணிகளை துவங்கி விட்டனர். ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, போதும் போதும்-னு சொல்ற அளவுக்கு தமிழில் ட்வீட் செய்து தமிழர்களின் மனதை கவர்ந்த ஹர்பஜன், அம்பதி ராயுடு உள்ளிட்ட பல வீரர்கள் பயிற்சிகளை துவக்கி விட்டனர். தலைமை கோச் ஸ்டீபன் பிளமிங் வரும் 27ம் தேதி அணியுடன் இணைய உள்ளார்.
வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, தூரத்தில் நின்று இரண்டு பேர், பயிற்சிகளை கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்க, கூர்ந்து பார்த்தால், மகேந்திர சிங் தோனி மற்றும் என்.ஸ்ரீனிவாசன். இரண்டு வருடங்களுக்கு பிறகு, மீண்டும் இந்த இரு பெரும் ஆளுமைகளை ஒன்றாக களத்தில் காண முடிந்தது, நமக்கு பழைய நியாபகங்களை நினைவூட்டியது.
மேட்ச் பிக்ஸிங், கரப்ஷன், மும்பை தான் மாஸ்-னு எவ்வளவு கூச்சலிட்டாலும், தோனி - ஸ்ரீனி எனும் இரு 'கிரிக்கெட் சாணக்கியர்கள்' இருக்கும் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை யாரும் அசைக்கக் கூட முடியாது என்பதே உண்மை!.