இந்திய கிரிக்கெட் அணி வீரர் எம்.எஸ் டோனியின் பெயரை பத்மபூஷன் விருதுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) பரிந்துரை செய்துள்ளது. டோனி பத்மபூஷன் விருது பெரும்பட்சத்தில், கோத்தாரி நாயுடு, வினோ மான்கண்ட், சுனில் கவாஸ்கர், ராஜா பாலேந்திர சிங், தின்கர் பால்வாந் தியோதர், கபில் தேவ், சந்து போர்தே மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் எலைட் பட்டியலில் இணையவுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பான கேப்டனாக எம்.எஸ் டோனியின் திகழ்ந்ததோடு, அனைத்து விதங்களிலும் தனது பங்களிப்பை அளித்துள்ளார். அதோடு, டி20, 50 ஓவர் ஐசிசி டிராபிகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையும் டோனிக்கு தான் சொந்தம்.
இது தொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: பந்மபூஷன் விருதுக்கு மகேந்திர சிங் டோனியின் பெயர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால்(பிசிசிஐ) பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி, 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை ஆகியவற்றை இந்தியாவிற்கு பெற்றுத் தந்துள்ளார். எனவே, டோனியின் பெயர் பத்மபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கேப்டன் பொறுப்பில் இருந்து இறங்கிய பின்னர், டோனியின் பேட்டிங் மேம்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. டோனி 2015-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபோதும், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். விராட் கோலி தலைமையில் தற்போது இந்திய அணி செயல்பட்டு வரும் நிலையில், ஒருநாள் போட்டியில் 14 இன்னிங்ஸில் 627 ரன்களை எடுத்திருக்கிறார். அவரது சராசரி ரன்விகிதம் 89.57 என்பது கவனிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. இதேபோல, ரன்குவிப்பு விகிதம் 85.65 ஆக உள்ளது.
இந்த ஆண்டு மகேந்திர சிங் டோனிக்கு மறக்க முடியாத ஆண்டாக அமையும் என்றால் அதில் மாற்றுக்கருத்து ஏதும் இருக்க முடியாது. ஏனெனில், 100 ஸ்டம்பிங் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை கைவசமாக்கினார். அதோடு, 300 போட்டிகளில் பங்கேற்ற 6-வது இந்திய வீரர் என்ற மைல்கல்லையும் எட்டினார். முன்னதாக முஹமது அசாருதின், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், யுவராஜ் சிங் ஆகியோர் 300-ஒருநாள் போட்டிகளை கடந்திருந்தனர்.
அதோடு, 100 அரைசதங்கள் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தற்பேதைய தொடரில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். அதிக அரைசதங்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும்(164), ராகுல் டிராவிட் இரண்டாவது இடத்திலும் (146) மற்றும் சௌரவ் கங்குலி மூன்றாவது இடத்திலும் (107) உள்ளனர்.
இந்த நிலையில், டோனியின் பெயர் பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.