இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையே கடந்த 4-ஆம் தேதி நடந்த இரண்டாவது டி20 போட்டியில், நியூசிலாந்து நிர்ணயித்த 197 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி, இக்கட்டான நிலையில் இருந்த போது களமிறங்கிய தோனி பொறுமையாக ஆடினார். வெற்றிக்கு 65 பந்துகளில் 130 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பேட் செய்ய வந்த தோனி, முதல் 26 பந்துகளில் 26 ரன்களே எடுத்தார். இறுதியில் 37 பந்துகளில் அவர் 49 ரன்கள் எடுத்தாலும், இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதைத் தொடர்ந்து, தொடரை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.
இந்த நிலையில், தோனியின் பேட்டிங் குறித்து சேவாக் சில கருத்துகளை வெளியிட்டுள்ளார். அதில், "அணியில் தனது பங்கு என்ன என்பதை தோனி முதலில் உணர வேண்டும். கடினமான இலக்கை அணி துரத்திய போது, ஆரம்பம் முதலேயே அவர் அடித்து ஆடியிருக்க வேண்டும். முதல் பந்தில் இருந்தே அவர் ரன்களை திரட்ட முற்சிக்க வேண்டும், அணி நிர்வாகமும் தோனியிடம் இதுகுறித்து விளக்க வேண்டும். மேலும், இந்திய அணி அவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதையும் நிர்வாகம் தெளிவுப்படுத்த வேண்டும்.
இருப்பினும், இந்தச் சூழ்நிலையில் இந்திய அணிக்கு தோனி கண்டிப்பாக தேவை. டி20 கிரிக்கெட்டிலும் கூட அவர் அணிக்கு தேவை தான். சரியான நேரத்தில் அவர் அணியில் இருந்து ஓய்வு பெறுவார். குறிப்பாக, இளம் வீரர்களின் வரவுக்கு தடையாக அவர் இருக்க மாட்டார்" என்றார்.
முன்பாக, இதே போன்று ஒருமுறை தோனி குறித்து சேவாக் கூறுகையில், 'சரியான மாற்று கிடைக்கும் வரை தோனி அணியில் நீடிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
ஆம்! அதுசரிதான். தோனிக்கு சரியான மாற்று இதுவரை கிடைக்கவில்லை எனலாம். ஆனால், தோனியும் கட்டெறும்பு தேய்ந்த கதையாக தனது அதிரடி ஆட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்.
இதற்கு சரியான சமீபத்திய உதாரணம் இது. டெல்லியில் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில், கடைசி ஓவரில் களமிறங்கிய தோனி, முதல் பந்திலேயே சிக்சர் அடித்துவிட்டு கோலியைப் பார்த்து சிரித்தார். அந்தச் சிரிப்பின் உண்மையான அர்த்தம், தோனியின் தீவிரமான ரசிகனுக்கே புரியும்... சிக்சர் அடிப்பதில் கூட தான் தடுமாறுவதை, அந்த சிரிப்பின் மூலம் வெளிப்படுத்தினார் தோனி.
அதுவே ஆரம்பகால தோனியாக இருந்திருந்தால், வாகாக வந்த அந்த பாலை சிக்சர் அடித்துவிட்டு சிரித்திருக்க மாட்டார். அடுத்த பந்தை எப்படி சிக்சருக்கு தூக்குவது என யோசித்து இருப்பார். இப்போது தன்னால் அதிரடியாக விளையாட முடியவில்லை என்ற தடுமாற்றத்தில் இருக்கும் தோனி, முதல் பந்திலேயே சிக்சர் அடித்ததால், தன்னையும் மீறி அந்தச் சிரிப்பை வெளிப்படுத்திவிட்டார்.