மகேந்திர சிங் தோனியின் கீப்பிங் திறன் மற்றும் அவரது கிரிக்கெட் அனுபவம் ஆகியவை காரணமாகவே அவர் அணியின் முக்கிய அங்கமாக திகழ்கிறார் என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்த கேள்விக்கும் பிரசாத் பதிலளித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராஃபியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், அணியில் பெரிய மாற்றங்கள் ஒன்றும் இல்லை. எனினும், நடந்து வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர்கள் சிலர் அணியில் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில், தோனி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியதாவது: உலகத்திலேயே தலைசிறந்த விக்கெட் கீப்பராக தோனி இன்றுவரை திகழ்ந்து வருகிறார். ஆனால், நாம் அவரது பேட்டிங் திறனை மட்டுமே உற்று நோக்குகிறோம்.
அணியின் கடினமாக சூழ்நிலையின் போது சிறப்பாக செயல்படும் அவர், இந்திய அணியின் விலை மதிக்க முடியாத சொத்து என்றே கூறலாம். சர்வதேச போட்டிகளில் அதிக அனுபவம் பெற்ற தோனி தலைசிறந்த வீரராக திகழ்வதோடு, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஏற்ற வீரர்.
கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார் தோனி. கீப்பர் என்ற முறையில் அவருக்கு ஒரு நாள் கூட மோசமான நாளாக அமைந்தது இல்லை. இதை பலர் தெளிவாக புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. சிறந்த கீப்பரான தோனியை பாராட்டுவதை விட்டுவிட்டு, அவரை நாம் முழு பேட்ஸ்மேன் என்ற கோணத்திலேயே பார்க்கிறோம் என்று கூறினார்.
புனே அணியில் விளையாடி வரும் தோனி இந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் 235 ரன்களை எடுத்துள்ளார். இதனிடையே தோனியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பிரசாத் பதிலளிக்கும்போது: என்னைப் பொறுத்தவரை, உலகத்தில் சிறந்த கீப்பராக தோனி இதுநாள்வரை திகழ்ந்து வருகிறார். விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணியின் பேட்டிங் வரிசையில், தோனி 5-வது வீரராக களம் இறங்குகிறார். சாம்பியன்ஸ் டிராஃபியில் விளையாடும் போது, தோனி எந்த இடத்தில் களம் இறங்குவார் என்பது குறித்து அணி நிர்வாகம் முடிவு செய்யும் என்றார்.
மேலும் பிரசாத் கூறும்போது: ரிஷப் பந்த், குல்திப் யாதவ், சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக், மற்றும் ஷார்துல் தாக்கூர் ஆகியோர் சாம்பியன்ஸ் டிராஃபியில் மாற்று வீரர்களுக்கான பட்டியலில் இருக்கின்றனர். இந்த சாம்பியன்ஸ் டிராஃபி அணியில் குல்திப் யாதவிற்கு இடம் கிடைக்கவில்லை என்றாலும், அவருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்று கூறினார்.