சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மோதினால் மட்டும் அனல் பறப்பது ஏன்?

தமிழனை பொறுத்தவரை ஊர், பேர் எல்லாம் பார்ப்பது கிடையாது. ஒருவர் தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டால், யார் நினைத்தாலும் அதை அழிக்க முடியாது

ANBARASAN GNANAMANI

பொதுவாக, ஐபிஎல் என்றால் இந்த இரு அணிகளின் ஆட்டத்தின் போது மட்டும் தான் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு, பரபரப்பு நிலவும். அவை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்.

இது வெறும் வாய் வார்த்தையோ, அல்லது வழக்கமான ஐபிஎல்-க்கான புரமோஷன் டாக் என நினைத்து விடாதீர்கள். உண்மையிலேயே, ஐபிஎல்-ல் சென்னையுடன் மும்பை அணி மோதுகிறது என்றால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு, குறிப்பாக வட இந்திய ரசிகர்கள் வெறித்தனமாக குறிப்பிட்ட அந்தவொரு போட்டியை மட்டும் காண்பார்கள்.

அதற்கு சில காரணங்கள் உள்ளன. வட இந்தியர்கள் ஒட்டுமொத்த தென்னிந்தியர்களையும், இன்றும் ‘மதராசி’ என்று தான் அழைப்பார்கள். குறிப்பாக, வட இந்தியர்கள் மத்தியில் தமிழர்கள் யாராவது வேலை செய்திருந்தால், அவர்களுக்குத் தெரியும், வட இந்தியர்கள் எப்படி நடத்துவார்கள் என்று. என்னதான் நண்பர்களாக இருந்தாலும், நாட்டின் கடைக் கோடி மாநிலமான தமிழகத்தைச் சேர்ந்த ஒருவன் வளர்ந்தால், அவர்களிடம் ஒரு பொறாமை எட்டிப் பார்க்கும்.

இந்த ஒரு பொறாமை தான், மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை அனல் பறக்க வைக்க முக்கிய காரணமாகும்.

கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்றாலும், இதில் கூட தமிழகத்திடம் தோற்க அவர்கள் விரும்புவதில்லை. ‘மதராசியிடம் போய் தோற்பதா?’ என்றே அவர்களின் எண்ணம் இருக்கும்.

அனைத்து வட இந்தியர்களும் இப்படித் தான் என்று கூறவில்லை. ஆனால், பெரும்பாலானவர்கள் இப்படித் தான். குறிப்பாக மும்பைக்காரர்கள்.

அதேபோன்று மற்றொரு விஷயத்தையும் கூர்ந்து கவனித்தால் ஒன்றை புரிந்து கொள்ள முடியும். அதாவது, வளர்ச்சியில் பின்தங்கி இருக்கும் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்து, இந்திய கிரிக்கெட் அணியை ஆண்ட தோனியின் வெற்றியை இன்னமும் வட இந்தியர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. நாடு முழுவதும் தோனிக்கு ரசிகர்கள் இருந்தாலும், என்ன தான் தோனியை அவர்கள் ரசித்தாலும், பரவலாக தோனியின் தனிப்பட்ட வளர்ச்சியை வட இந்தியர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதே உண்மை.

இதற்கு ஒரு சரியான உதாரணம் இங்கே,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு ஆண்டுகால தடைக்குப் பின்னர், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணி 2016ம் ஆண்டு ஐபிஎல்-ல் தோனியை வாங்கி, கேப்டனாக நியமித்தது. ஆனால், அத்தொடரில், புனே பிளே ஆஃப் சுற்றுக்கு இடம் பெறாமல் போகவே, 2017ம் ஆண்டு, ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்தை கேப்டனாக நியமித்தது. தோனி, விக்கெட் கீப்பராக அணியில் தொடர்ந்தார். ஸ்மித் தலைமையில், முதல் போட்டியில் புனே வென்ற பின், அந்த அணி உரிமையாளரின் சகோதரர் ஹர்ஷ் கோயங்கா தனது ட்விட்டரில், “காட்டுக்கு யார் உண்மையான ராஜா என்று ஸ்மித் நிரூபித்து விட்டார். தோனியை முற்றிலும் அவர் மறைத்துவிட்டார். ஸ்மித்தை கேப்டனாக்கியதற்கு பெருமைப்படுகிறோம்” என்ற ட்வீட் செய்திருந்தார். இந்த சம்பவம் தோனியை மனதளவில் பாதித்தது. ஆனால், அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவேயில்லை.

கவாஸ்கர், சச்சின், ரோஹித், விராட் கோலி போன்ற பெரு நகர ஆளுமைகளின் மத்தியில் தோனி வெற்றிக் கொடி நாட்டியது மிகப்பெரிய சாதனை தான். அதுவும் ஒரு கேப்டனாக.

ஆனால், தமிழனை பொறுத்தவரை ஊர், பேர் எல்லாம் பார்ப்பது கிடையாது. ஒருவர் தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டால், யார் நினைத்தாலும் அதை அழிக்க முடியாது. இன்று தோனி விஷயத்திலும் அது தான் நடந்துள்ளது.

தோனி, ஜார்கண்ட்டில் இருந்து வந்தவரா, மும்பையில் இருந்து வந்தவரா என்றெல்லாம் நாம் பார்க்கவில்லை. சென்னை அணிக்கு வந்தார், சென்னை மண்ணோடு சங்கமித்தார். தமிழக மக்கள் மனதிலும் இடம்பிடித்தார். இன்று ‘தல’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

இப்படிப்பட்ட வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலத்தைச் சேர்ந்த ஒருவன், கடைக் கோடி மாநிலத்திற்கு தலைவனாகி, ஐபிஎல் கிரிக்கெட்டில் வெற்றிமேல் வெற்றிகளை குவித்ததால் தான், சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் போர் ஏற்பட காரணமானது.

இதற்கு ஒரு சமீபத்திய உதாரணம் இங்கே,

மும்பை இந்தியன்ஸ் ரசிகர் ஒருவர் தனது ட்விட்டரில், “மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பியுள்ள சென்னை அணியை வரவேற்கிறேன். எங்களது கடுமையான போட்டியாளரை இவ்வளவு நாள் மிஸ் செய்தோம். ஆனால், ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். மும்பை அணிதான் உலகத்தை வெல்லப் போகிறது” என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து ட்வீட்டி இருந்தார்.

இதற்கு ஸ்டைலாக பதில் அளித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், “ஹா… ஹா… மிக்க நன்றி. ஆனால்… நாங்கள் தான், நாங்கள் தான், உங்களை வெல்லப் போகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

சென்னை அணிக்கு கோப்பை வங்கித் தந்தாலும், தராவிட்டாலும் என்றுமே தமிழகத்தின் கிரிக்கெட் ‘தல’ தோனி மட்டும் தான்.

மீண்டும் சென்னை அணிக்கு வந்த பின் தோனி உதிர்த்த வார்த்தை இதுதான், ‘நான் என் வீட்டிற்கு வந்துவிட்டேன்!’.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close