Advertisment

இசையும், கிரிக்கெட்டும்!

'இசை எங்கிருந்து வருது?'-னு வடிவேலுவின் காமெடியில் வரும் காட்சியை போன்று...

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
இசையும், கிரிக்கெட்டும்!

இன்று ஜூன் 21, நாடு முழுவதும் யோகா தினம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்க, சப்தமில்லாமல் இசைத்துக் கொண்டிருக்கிறது 'உலக இசை தினம். ஆம்! இன்று உலக இசை தினமும் கூட..

Advertisment

இசையை நம் வாழ்வில் இருந்து எப்போதுமே பிரிக்க முடியாது. நீங்க மகிழ்ச்சியாக இருந்தாலும், துக்கமாக இருந்தாலும் உங்களுடன் இசை பயணித்துக் கொண்டே இருக்கும். காலை எழுவது முதல், இரவு படுக்கைக்கு செல்லும் வரை, ஒவ்வொரு வடிவத்தில் இசை நம்மை ஆட்கொண்டே இருக்கிறது.

பலர் இன்றும் 'இசைஞானி' இளையராஜா பாடலைக் கேட்காமல் தூங்குவதில்லை. காலையில் எழுந்தவுடன் ரஹ்மானின் துள்ளல் இசையை கேட்காமல் பொழுது செல்லாது என்று கூறுவோரும் உண்டு.. வேலைப் பளுவிற்கு இடையே அனிருத்தின் பீட் சாங் தான் எங்கள் எனர்ஜி என்று துள்ளும் இளசுகளும் உண்டு.

இசையைப் பற்றி அக்கு வேறா ஆணி வேறா நாம் இங்கு விளக்கப் போவதில்லை... 'இசை எங்கிருந்து வருது?'-னு வடிவேலுவின் காமெடியில் வரும் காட்சியை போன்றும் அலசத் தேவையில்லை.

ஆனால், சாமானிய மக்களாகிய நம்மை தினம் ஆட் கொண்டிருக்கும் இசை, நாம் பெரிதும் கொண்டாடும் கிரிக்கெட்டில், வீரர்களை எப்படி ஆட் கொள்கிறது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்..

முதலில் நம்ம 'தல' தோனி....

இவருக்கு எப்போதும் இசையை ரசிப்பதில் பெரிய நாட்டமில்லை. நம்மவர் பைக் ரைட், கார் ரைட், துப்பாக்கிச் சுடுதல், செல்லப் பிராணிகளுடன் விளையாட்டு, கார்டனிங் என்று தான் ஆர்வம் அதிகம்.

ஆனால், தோனி எப்போது பாடல்கள் அதிகம் பாடுவார் தெரியுமா? கிரிக்கெட் மேட்சுகளின் போது தான். இதுகுறித்து அவரே ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, "நான் பேட்டிங் செய்யும் போது, பந்தின் மீது அதிக கவனம் கொள்வேன். சில சமயங்களில், எனது கவனம் என் கட்டுப்பாட்டை மீறி திசை மாறும். இதனால், நான் சில முறை சிரமத்தை சந்தித்துள்ளேன். இதை தவிர்ப்பதற்காக, பந்துவீச்சாளர் எனக்கு பந்து வீச தயாராகும் போது, ஏதாவது ஒரு பாடலை முணுமுணுக்க ஆரம்பித்து விடுவேன்.. எப்போது, பவுலர் கையில் இருந்து பந்து வெளியே வருகிறதோ, அப்போது அந்த முணுமுணுப்பை நிறுத்திவிட்டு, பந்தின் மீது முழு கவனத்தை நிலை நிறுத்துவேன். இந்த பாணி, எனக்கு ரொம்பவே உதவியது.

இப்படி நான் பாடுவதால், பந்துவீச்சாளர் என்னை நெருங்கும் வரை, எனது மனம் வேறு எதனைப் பற்றியும் சிந்திக்காது. காலியாக இருக்கும். இதனால் நான் அந்த பந்தை சிக்ஸருக்கோ, பவுண்டரிக்கோ அனுப்ப எளிதாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

'நான் ஒரு டெக்னிக்கலான கிரிக்கெட்டர் கிடையாது' என்று தோனி சொல்வதுண்டு.. ஆனால், ஃபோகஸ் மாறிவிடக் கூடாது என்பதற்காக இசையை கிரிக்கெட்டில் கொண்டு வந்தீங்க பாருங்க... நீங்க பலே டெக்னிக்கலான கிரிக்கெட் வீரர் தல..

அடுத்து நம்ம ஷேவாக்,

ஈவு இரக்கம் இல்லாத இந்த கிரிக்கெட்டர் மனதில் ஒரு இசைக் கலைஞன் இருக்கிறான் என்றால் நம்ப முடிகிறதா? இவருக்கும் 'தல' தோனியின் பாணி தான்.

ஷேவாக் ஒரு பேட்டியில் கூறுகையில், "பந்துவீச்சாளர் என்னை நோக்கி வரும் பொழுது, நான் எனக்கு பிடித்த பாலிவுட் பாடல்களை பாடிக் கொண்டிருப்பேன். அப்படியொரு ஆரவாரமான சூழ்நிலையில், அந்த இசை எனது மனதை நிலையாக வைக்கும். ஆனால், அந்த பந்தை நான் சிக்ஸருக்கு தூக்கிய பின்னர், ரசிகர்களின் கரவொலி இருக்கும் பாருங்க... அது எனது பாடலின் இசையை மிஞ்சிவிடும். அந்த இசை அடங்க ரொம்ப நேரம் ஆகும்" என்று தனக்குள் இருக்கும் எம்.எஸ்.வி யை வெளியே காட்டுகிறார் ஷேவாக்.

அடுத்ததாக, ஹர்திக் பாண்ட்யா...

பேட்டிங் இருக்கிறதோ இல்லையோ... ஹேர் கட்டிங்கால் இந்திய அணியின் ராக் ஸ்டாராக வலம் வருபவர் ஹர்திக் பாண்ட்யா. கிரிக்கெட் தவிர, இசை வெறியர் இவர். மைக்கேல் ஜாக்சனை மனதில் அடிக்கடி ஓடிக் கொண்டிருக்கும் கற்பனையாளர். வெறும் கற்பனையோடு நின்றுவிடாமல், ஒரு முழு ஆல்பம் உருவாக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார். இந்த வருட இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி ராக் ஸ்டாரின் ஆல்பம் வெளியாக உள்ளது. யார் கண்டா... அதன்பின், கிரிக்கெட்டை விட்டு, பாப் சிங்கராக கூட மாறிவிடலாம்.

அடுத்தது நம்ம ஷிகர் தவான்...

மனைவி, பிள்ளைகள், கிரிக்கெட் என்று நேர் கோட்டில் சென்றுக் கொண்டிருந்த ஷிகர் தவான் சமீபத்தில் ஃப்ளூட் வாசித்து வெளியிட்ட வீடியோ, செம வைரல்.. அப்புறம் தான் தெரியுது, மனுஷன் பக்காவா மாஸ்டர் கிட்ட ஃப்ளூட் கத்துக்கிட்டு இருக்காருன்னு.. இவருக்குள்ள இப்படியொரு யுவன் ஷங்கர் ராஜா இருந்திருக்கார் பாருங்களேன்....!

ஆனா, சும்மா சொல்லக் கூடாது.. அற்புதமாக ஃப்ளூட் வாசித்து, அதுவும் தனது குருஜிக்கு முன்னால் அசத்தியிருக்கிறார் தவான்...

சுரேஷ் ரெய்னா...

நாங்க மட்டும் என்ன சும்மாவா என்று தெறிக்க விடுகிறார் 'குட்டித் தல' ரெய்னா...

"மீருதியா கேங்க்ஸ்டர்ஸ்" என்ற பாலிவுட் படத்தில் ரெய்னா ஒரு பாடலே பாடியிருக்கிறார் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அப்படத்தில் 'தூ மிலி சப் மிலா' எனும் பாடலை பாடி கிறங்கடித்து இருப்பார் ரெய்னா. பாடல் ரெய்னாவுக்காகவே செம ஹிட்.

அதுமட்டுமின்றி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், மேடைகளில் பாடி அசத்தும் ரெய்னா, இந்தாண்டு இலங்கையில் நடைபெற்ற நிடாஹஸ் டிராபி தொடரின் போது, ஹோட்டலில் அமர்ந்து சக வீரர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கிருந்த இசைக்குழு பாலிவுட் பாடல்களை பாடிக்கொண்டிருந்தது. அவர்களுடன் சேர்ந்து ரெய்னாவும் பாடத் தொடங்கினார். பாலிவுட் சிங்கர் கிஷோர் குமாரின் கிளாசிக் பாடல் ஒன்றை பாடிய ரெய்னா, அங்கிருத்த ஒட்டுமொத்த கூட்டத்தையும் ரொம்ப நேரம் கைத்தட்ட வைக்கும் அளவிற்கு பாடி அசத்தியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..

இந்திய வீரர்கள் மட்டும் தான் இசையில் ஆர்வம் உள்ளவர்களா என்று கேட்டால், நஹி! என்று தான் சொல்ல வேண்டும். சர்வதேச அளவில், நம்ம டிஜே பிராவோ இருக்காரே... ஐபிஎல் போட்டிகளின் போது, அவரது 'சாம்பியன்' பாடல் ஒலிக்காத ஸ்டேடியமே கிடையாதே... சலோ சலோ, ரன் தி வேர்ல்டு போன்ற பாடல்கள் மிகப் பிரபலம். குறிப்பாக, பிராவோ 'உலா' எனும் தமிழ் படத்தில் 'ஏன் டா' என்ற பாடலை பாடி, ஆடியும் தியேட்டரை அதிர வைத்தார்.

இவ்வளவு பேசிவிட்டு, நம்ம கேப்டன் கோலியைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியுமா? தனது காதல் மனைவி அனுஷ்காவை கரம் பிடிப்பதற்கு முன், படு பிஸியானதிருமண வேலைகளுக்கு இடையே, அனுஷ்காவிற்காக பக்காவான இசை கம்போஸிங்குடன், ரொமாண்டிக் பாடல் ஒன்றை பாடி அந்த வீடியோவை விராட் வெளியிட, அதிரிபுதிரி ஹிட்டானது.

கிரிக்கெட் களமாக இருந்தாலும் சரி, இசைக் களமாக இருந்தாலும் சரி... கிரிக்கெட் வீரர்கள் மாஸ் தான்!.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment