நாக்பூரில் நடைபெறும் இந்தியா-இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 205 ரன்களில் சுருண்டது. அஸ்வின் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி, 3 டி-20 போட்டிகளில் விளையாட இந்தியா வந்திருக்கிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட், மழை காரணமாக டிராவில் முடிந்தது.
இந்தியா-இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று (24-ம் தேதி) நாக்பூரில் தொடங்கியது. ‘டாஸ்’ வென்ற இலங்கை கேப்டன் சன்டிமால், ‘பேட்டிங்’கை தேர்வு செய்தார். இந்திய தரப்பில் புதுமுக வீரரான தமிழகத்தை சேர்ந்த விஜய்சங்கருக்கு விளையாடும் ‘லெவன்’-ல் இடம் கிடைக்கவில்லை. ஷிகர் தவானுக்கு பதிலாக மற்றொரு தமிழக வீர முரளி விஜய்-யும், புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ரோஹித் ஷர்மாவும், முகம்மது ஷமிக்கு பதிலாக இஷாந்த் சர்மாவும் களம் இறக்கப்பட்டனர்.
இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் என இரண்டு வேகங்கள், அஷ்வின், ரவீந்திர ஜடேஜா என இரு சுழல்கள் என மொத்தமே 4 பந்து வீச்சாளர்களுடன் கேப்டன் விராட் கோலி அணியை இறக்கியது ஆச்சர்யமாக இருந்தது.
ஆனால் விராட் கோலியின் நம்பிக்கைக்கு ஏற்ப இலங்கை பேட்டிங் வரிசையை சீர்குலைக்க 4 பந்து வீச்சாளர்களே போதுமானதாக இருந்தார்கள். அந்த அணியின் தொடக்க வீரர் சமரவிக்ரமா 13 ரன்களில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குணரத்னே (51 ரன்கள்), கேப்டன் சன்டிமால் (57 ரன்கள்) ஆகியோர் மட்டுமே அந்த அணியில் ஓரளவு தாக்குப் பிடித்தார்கள்.
மொத்தம் 79.1 ஓவர்கள் விளையாடிய இலங்கை 205 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அஷ்வின் 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். உமேஷ் யாதவுக்கு விக்கெட் கிடைக்கவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு களம் திரும்பிய அஷ்வின், ஜடேஜா ஆகியோருக்கு கொல்கத்தா டெஸ்டில் விக்கெட்டே கிடைக்கவில்லை. நாக்பூரில் முதல் நாளே இருவரும் சுழல் ஜாலம் நிகழ்த்தி, தங்களை தவிர்க்க முடியாத சுழல் பந்துவீச்சாளர்களாக நிரூபித்தார்கள்.
தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 8 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து 11 ரன்கள் எடுத்திருக்கிறது. தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 7 ரன்களில் காமேஜ் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆனார். முரளி விஜய், புஜாரா ஆகியோர் தலா 2 ரன்களுடன் களத்தில் நிற்கிறார்கள். நாளை (25-ம் தேதி) 2-வது நாள் ஆட்டத்தை அவர்கள் தொடர்கிறார்கள்.