இப்போதெல்லாம் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி மேல் வெற்றி குவித்து வருவதை பார்க்கும் போது, நமக்கே சில சமயம் சலிப்பை ஏற்படுத்துகிறது. அந்தளவிற்கு, கிரிக்கெட்டில் இந்தியாவின் தரம் உயர்ந்திருக்கிறது. இருப்பினும், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு ஆடுகளங்களில் இன்னும் இந்தியாவால் பெரியளவில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இத்தனை ஆண்டுகள் கழித்து, முதன் முதலாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தான், சமீபத்தில் தென்னாப்பிரிக்க மண்ணில் ஒருநாள் தொடரை வென்று சரித்திரம் படைத்தது. இந்திய ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடித் தீர்த்தனர்.
இதே போன்று, 16 வருடத்திற்கு முன்பு இந்திய ரசிகர்கள் கிடா வெட்டி கொண்டாடிய போட்டி ஒன்று இருக்கிறது என்றால், அது இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியாகத் தான் இருக்க முடியும்.
அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்தது. அப்போதெல்லாம், 300 ரன்கள் என்பதே மிகப்பெரிய விஷயம். அதுவும், இறுதிப் போட்டியில் 325 எனும் ரன்னை சேஸிங் செய்ய வேண்டும் என்றால், நினைத்துப் பாருங்கள். இந்தியா நிச்சயம் தோல்வி அடையும் என அனைவரும் கணிக்க, அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய அணி 146/5 என்று தத்தளித்தது. ஆனால், அதன் பின் யுவராஜ் சிங் மற்றும் முகமது கைஃப் பார்ட்னர்ஷிப் அமைத்து, 121 ரன்கள் சேர்த்தனர். யுவராஜ் 63 ரன்னில் அவுட்டாக, கைஃப் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பெற வைத்தார். 49.3வது ஓவரில் எட்டு விக்கெட்டுகளை இழந்து இந்தியா வென்றது.
கைஃபின் அந்த ஆட்டம் அவரது வாழ்விலேயே மிகச் சிறந்த இன்னிங்ஸ் எனலாம். இப்போது கைஃப் அணியில் இல்லை என்றாலும், சமூக தளங்களில்... குறிப்பாக ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது ரசிகர்களோடு உரையாடுவது கைஃபின் வழக்கம். அதுபோன்று, நேற்று ரசிகர்களுடன் சாட் செய்துக் கொண்டிருந்த போது, ரசிகர் ஒருவர், '2002 நாட்வெஸ்ட் சீரிஸ் இறுதிப் போட்டியில் நீங்களும், யுவராஜும் விளையாடிக் கொண்டிருந்த போது, இங்கிலாந்து வீரர்கள் யாராவது உங்களை 'ஸ்லெட்ஜ்' செய்தார்களா?' என கேள்வி எழுப்பினார்.
@MohammadKaif Hi kaif, what you and Yuvi were talking during Natwest Final ? Was their any sledging from English players ?#AskKaif
— Vaibhav Yelegaonkar (@catchvaibhav81) 27 February 2018
Yes, Nasser Hussain actually called me a Bus driver :) was good to take them for a ride ! https://t.co/wUeeUnowdN
— Mohammad Kaif (@MohammadKaif) 27 February 2018
அதற்கு பதில் அளித்துள்ள கைஃப், "ஆம்! அப்போது இங்கிலாந்து கேப்டனாக இருந்த நாசர் ஹுசைன் என்னை பஸ் டிரைவர் என்று அழைத்தார். அவர்களை வைத்து பஸ் ஓட்டிச் செல்லும் நல்ல டிரைவர்! என்று என்னை ஸ்லெட்ஜ் செய்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.