இந்தியாவின் பேட்மின்டன் புலிகளின் பரபரப்பு மோதலில் சிந்துவை போராடி வீழ்த்தினார் சாய்னா நேவால். இதனால் தேசிய சீனியர் சாம்பியன் பட்டம் அவருக்கு கிடைத்தது.
தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகள் சாய்னா நேவாலும், பி.வி.சிந்துவும் மோதினார்கள்.
சாய்னா நேவால், உலக தரவரிசையில் 11 வது இடத்தில் இருக்கிறார். சிந்து, 2-வது இடத்தில் இருப்பவர்! போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே இரு வீராங்கனைகள் இடையே கடும் போட்டி நிலவியது. முதல் செட்டில் சாய்னா 8-6 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றார். சாய்னாவுக்கு அவரது அனுபவம் கை கொடுத்தது.
சிந்து கடும் போட்டி கொடுத்தாலும், அவரை தன்னை முந்தாத அளவுக்கு பார்த்துக் கொண்டார் சாய்னா. ஒரு கட்டத்தில் சாய்னா 17-12 என்ற முன்னிலை வகித்தார். பின்னர் சிந்து அதிரடியாக 16-17 என நெருங்கினார். ஆனால் அனுபவப் புலியான சாய்னா மீண்டும் ஆவேசம் கொண்டு 21-17 என்ற கணக்கில் முதல் செட்டை வென்றார்.
2-வது செட் ஆட்டமும் பலத்த போட்டியாக இருந்தது. இதில் முதலில் சிந்து முன்னிலை பெற்றாலும் சாய்னா சளைக்காமல் போராடி 6-6 என்ற கணக்கில் சம நிலைக்கு கொண்டு வந்தார். பின்னர் சிந்து தன்னுடைய புள்ளி கணக்கை தொடர்ச்சியாக மேல் கொண்டு சென்றார். ஒருகட்டத்தில் 18-16 என்ற கணக்கில் சிந்து மீண்டும் முந்தினார். ஆனால் மீண்டும் சாய்னா போராடி 18-18 என சமன் செய்தார்.
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வென்ற இந்த இரு வீராங்கனைகளின் ஆட்டம் இரு புலிகளின் சரிசம மோதலாக தென்பட்டது. 2-வது செட் இறுதி வரை பரபரப்பு நிறைந்ததாக அமைந்தது. தொடர்ச்சியாக 19-19, 20-20, 21-21, 22-22 என சமனான நிலையிலே சென்றது. இருவரும் ஒருவர் செய்யும் தவறை மற்றொருவர் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்தனர். கடைசியில் ஆட்டம் சாய்னா வசம் சென்றது. 27-25 என்ற கணக்கில் செட்டை தன் வசப்படுத்தி, சாம்பியன் பட்டம் வென்றார்.
வேகத்தைவிட, விவேகமான சாய்னாவின் ஆட்டம் வென்றது. தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றார் சாய்னா நேவால். உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சிந்துவுக்கு இது அதிர்ச்சி தோல்விதான்!