உலகக் கோப்பைக்கு முன் தாய்க்கு நெஹ்ரா அளித்த 2 வாக்குறுதி... ஒன்னு இங்க இருக்கு; இன்னொன்னு எங்க?

2003 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை அவ்வளவு எளிதில் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா உலகக் கோப்பையை வென்ற 2011 சீசன் கூட, 2003 சீசனிடம் தோற்றுப் போகும். அந்தளவுக்கு வெறித்தனத்துடன் ரசிகர்கள் பார்த்த உலகக் கோப்பை அது.

காரணம்…. சவால்!

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை என அனைத்துமே பலம் வாய்ந்த அணிகளாக வலம் வந்தன. அதிலும், ஆஸ்திரேலியா ‘நான் அடிச்ச 10 பேருமே Don தாண்டா’ மோடில் எதிரணிகளை பயத்தில் அலற வைத்தது.

அப்படிப்பட்ட மிரட்டலான களத்தை தான் ‘தாதா’ கங்குலி தலைமையிலான இந்திய அணி எதிர்கொண்டது.

சச்சின், சேவாக், டிராவிட், யுவராஜ், கைஃப், தினேஷ் மோங்கியா, ஜாகீர், ஸ்ரீநாத், ஹர்பஜன் என்று இந்திய அணி ஆர்ப்பாட்டமாக உலகக் கோப்பையில் களமிறங்கியது.

நெஹ்ராவும் அணியில் இடம் பிடித்திருந்தார். வாய் நிறைய பற்களுடன், நம்ம லக்ஷ்மிபதி பாலாஜிக்கே சிரிப்பில் டஃப் கொடுக்கும் நெஹ்ரா, உலகக் கோப்பையில் தனது பவுலிங் மூலம் எதிரணிக்கு டஃப் கொடுக்க ஆயத்தமானார்.

உலகக் கோப்பைக்கு கிளம்பும் முன் அவர் தன் தாய்க்கு சத்தியம் ஒன்றை செய்து கொடுத்தார்.

‘இந்த உலகக் கோப்பையில் இரண்டு போட்டியிலாவது இந்தியா என்னால் ஜெயிக்கும்’ என்பதே அது.

சொன்னது போன்று, டர்பனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய ரசிகர்களை திக்குமுக்காட வைத்துவிட்டார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் மட்டுமே எடுக்க, ரசிகர்கள் சற்றே ஜெர்க் ஆனார்கள்.

காரணம் டிரெஸ்கோதிக், நிக் நைட், மைக்கேல் வாகன், நாசர் ஹுசைன், காலிங்வுட், ஃபிளிண்டாஃப் ஆகிய பேட்ஸ்மேன்கள் தான். இவர்களை சமாளிக்க இந்த ஸ்கோர் போதுமா? என்று ஏதோவொரு நம்பிக்கையில் பந்து வீச வந்தது கங்குலி ஆர்மி.

ஆனா சும்மா கிழி கிழின்னு நம்ம நெஹ்ரா இங்கிலாந்தை கிழித்து தொங்கவிட்டு விட்டார் நெஹ்ரா. 10 ஓவர்கள் வீசி 2 மெய்டன்களுடன் 23 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

நம்மாளு, அந்த காலத்து இம்ரான் தாஹிர். விக்கெட் எடுத்துவிட்டால் றெக்கை முளைத்து அப்படியே ஓட ஆரம்பித்துவிடுவார். ஒரு விக்கெட் விழுந்தாலே, பெவிலியன் தாண்டி ஓடும் நெஹ்ராவை பிடித்து கொண்டு வருவது கஷ்டம். இதில், 6 விக்கெட்டுகள் எடுத்தால் என்ன ஆயிருக்கும் நெனச்சு பாருங்க…

மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி ஓடிக் கொண்டிருந்த நெஹ்ராவை ஒவ்வொரு முறையும் பிடித்து திரும்பக் கொண்டு வருவதற்குள் கேப்டன் கங்குலிக்கு மூச்சே நின்றுவிட்டது.


தாய்க்கு கொடுத்த சத்தியத்தின் படி, ஒரு போட்டியில் வென்றுக் கொடுத்த நெஹ்ரா, வேறு எந்தப் போட்டியிலும் அந்த உலகக் கோப்பையில் சொல்லிக் கொள்ளும்படி பந்து வீசவில்லை.

எனினும், இங்கிலாந்தை கதறவிட்ட நெஹ்ராவுக்கு எப்போதும் நமது ஹார்ட்டில் இடமுண்டு!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close