சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஆசிஷ் திவான்சிங் நெஹ்ரா!

நெஹ்ராவின் கேரியர் அவ்வளவு தான் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றம் தருவது போல் அமைந்தது ஐபிஎல் தொடர்

ஆசிஷ் திவான்சிங் நெஹ்ரா என்கிற ஆசிஷ் நெஹ்ரா… இந்தப் பெயர் கொண்ட கிரிக்கெட் வீரர் இந்திய அணிக்காக அசாருதீன் தலைமையிலும் விளையாடியிருக்கிறார், சச்சின் தலைமையிலும் விளையாடி இருக்கிறார், கங்குலி தலைமையிலும் விளையாடியிருக்கிறார், டிராவிட் தலைமையிலும் விளையாடியிருக்கிறார், கும்ப்ளே தலைமையிலும் விளையாடி இருக்கிறார், தோனி தலைமையிலும் விளையாடியிருக்கிறார், இப்போது கோலி தலைமையிலும் விளையாடிக் கொண்டிருக்கிறார். இனியும் விளையாடுவார் என நாம் எதிர்பார்த்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் தேதியை அறிவித்திருக்கிறார் இந்த லெஃப்ட் ஆர்ம் பந்துவீச்சாளர்.

1999-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில், 21 வயது வீரனாக அறிமுகமானார் இந்த டெல்லி பந்துவீச்சாளர் நெஹ்ரா. அப்போட்டியில், இலங்கையின் முதல் இன்னிங்ஸில் முதல் விக்கெட்டைக் கைப்பற்றியவர் நெஹ்ரா தான். இலங்கை வீரர் மார்வன் அட்டப்பட்டுவை 6 ரன்னில் எல்பிடபில்யூ செய்து, தனது முதல் சர்வதேச விக்கெட் கணக்கை தொடங்கினார்.

ஆனால், தொடர்ச்சியாக காயத்தில் சிக்கி மிகவும் அவஸ்தைப்பட்டார். தனது வாழ்நாளில் கிரிக்கெட் விளையாட்டினால் ஏற்பட்ட காயம் காரணமாக மொத்தம் 12 அறுவை சிகிச்சைகளை செய்திருக்கிறார் நெஹ்ரா. இதனாலேயே அவர் பல போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை இழந்திருக்கிறார். 1999-லேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான நெஹ்ரா, இதுவரை மொத்தமாக 17 டெஸ்ட் போட்டிகளில் தான் ஆடியிருக்கிறார். 44 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். கடைசியாக பாகிஸ்தானிற்கு எதிராக 2004-ஆம் ஆண்டு விளையாடிய டெஸ்ட் போட்டியே இவரது கடைசி டெஸ்ட் போட்டியாகும். அந்தளவிற்கு அதிகமான காயங்களால் அணியில் இடம்பெற முடியாமல், இறுதியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தே நீக்கப்பட்டார்.

நெஹ்ராவின் நெருங்கிய நண்பரான யுவராஜ் சிங் ஒருமுறை நெஹ்ரா காயம் அடைவது குறித்து நகைச்சுவையாக கூறுகையில், “இவர் தூங்கும் போதும் காயம் அடைந்துவிடுவார்” என்றார்.

2001-ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான நெஹ்ரா, அந்தப் போட்டியில் முதல் ஓவரை வீசும் வாய்ப்பைப் பெற்றார். இரண்டாவது பந்திலேயே ஜிம்பாப்வே வீரர் கேம்ப்பெல்லை அவுட்டாக்கி தனது முதல் ஒருநாள் விக்கெட்டை கைப்பற்றினார். டெஸ்ட் போட்டிகளில் அதிகம் இடம் பெற முடியாவிட்டாலும், ஒருநாள் தொடர்களில் தொடர்ச்சியாக அணியில் இடம் பிடித்துக் கொண்டிருந்தார் நெஹ்ரா.

நெஹ்ரா தன் அம்மாவுக்கு செய்துக் கொடுத்த சத்தியம்:

தனது சிறப்பான பெர்ஃபாமன்ஸ் காரணமாக 2003-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்தார் நெஹ்ரா. பிசிசிஐ, வீரர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டவுடன் தன் தாய்க்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்தார் நெஹ்ரா. அதாவது, “உலகக் கோப்பை தொடரில் இரண்டு போட்டியிலாவது இந்திய அணி என்னால் வெற்றிப் பெறும். அதை நான் செய்து காட்டுவேன்” என்று உறுதியளித்தார்.

அவரது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ‘செம’யாக ஒரு போட்டி அமைந்தது. அதுவும் இங்கிலாந்திற்கு எதிராக… டர்பனில் இந்தியா, இங்கிலாந்து மோதிய போட்டியில், முதலில் ஆடிய இந்திய அணி, 50 ஓவர்களில் 250 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால், எளிதான இலக்குடன் களமிறங்கிய இங்கி., அணிக்கு நெஹ்ராவின் ரூபத்தில் ஏழரை வந்தது. அந்த அணியின் மைக்கேல் வாகன், நாசர் ஹுசைன், ஸ்டீவர்ட், காலிங்வுட் உள்ளிட்ட பெரும் தலைகளை சாய்த்து மொத்தம் 6 விக்கெட்டுகளை அள்ளினார் நெஹ்ரா. அதுவும் பத்து ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். ஒவ்வொரு விக்கெட் எடுக்கும் போதும், இரண்டு கைகளையும் இறக்கை போல் நீட்டிக் கொண்டு வளைந்து வளைந்து ஓடிய அந்த நினைவுகளை 90-s கிட்ஸ் எவரும் மறந்திருக்கமாட்டார்கள். முடிவில், இங்கிலாந்து 168 ரன்னில் அடங்கிப் போனது. ஆனால், மற்ற எந்தப் போட்டியிலும் அவர் இந்தளவிற்கு மிரட்டவில்லை. இருப்பினும், அந்த உலகக்கோப்பை தொடரில் மிகவும் கவனிக்கப்படும் பவுலராக உருவெடுத்தார் நெஹ்ரா.

அந்தக் காலக்கட்டத்தில் கங்குலி தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அவர் இருக்கும் வரை நெஹ்ராவிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டது. இதனால் தொடர்ந்து இந்திய ஒருநாள் அணியில் அவரது பெயர் அடிப்பட்டுக் கொண்டே இருந்தது. ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை… மீண்டும் அவரே அடிப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் அவதிப்பட்டார். போட்டிகளின் போதே விரல்களுக்கு இடையே உள்ள சதைகள் கிழிந்து ரத்தம் வழிவதும், பவுலிங் செய்கையில் கால் இடறி கீழே விழுவதும் என ரசிகர்களே நேரடியாக பார்க்கும்படி அவருக்கு காயங்கள் நிகழ்ந்தன.

இதனால் 120 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவரால் விளையாட முடிந்தது. அதில் 157 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அவரது ஆவரேஜ் 31.72-ஆக இருந்தது. இது அவரது சக போட்டியாளர்களின் அவரேஜை விட அதிகம். ஆனால், ஆவரேஜ் குறைவாக வைத்திருப்பவரே சிறந்த பவுலர் ஆவார். இதனால், ஒருநாள் போட்டிகளில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட நெஹ்ரா, கடைசியாக 2011-ஆம் ஆண்டு பாகிஸ்தானிற்கு எதிராக நடந்த உலகக்கோப்பை போட்டியில் விளையாடினார். அதற்கு பின் அவர் ஒருநாள் போட்டியில் சேர்க்கப்படவில்லை.

மீண்டு வந்த அடிபட்ட புலி:

நெஹ்ராவின் கேரியர் அவ்வளவு தான் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றம் தருவது போல் அமைந்தது ஐபிஎல் தொடர். சர்வதேச போட்டிகளில் இருந்து ஒதுக்கப்பட்டாலும், ஐபிஎல் போட்டிகளில் களம் கண்டார் நெஹ்ரா. அதிலும், ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும், தன்னை ஒரு இளம் வீரன் என்று நினைத்துக் கொண்ட நெஹ்ரா, கடும் பயிற்சிகள் மேற்கொண்டு ‘பக்கா’ லைன் அன்ட் லெந்த்தை ‘கப்’பென்று பிடித்துக் கொண்டார். டி20-ல் ஒரு பவுலருக்கு மொத்தமாகவே 4 ஓவர்கள் தான் வீச அனுமதி. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நெஹ்ரா, அந்த நான்கு ஓவரை துல்லியமான லைன் அன்ட் லெந்த்தில் வீசத் தொடங்கினார்.

அதிலும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவர் தேர்வானது, அந்த அணிக்கு மட்டுமல்ல, இந்திய அணிக்கும் சேர்த்து தான் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். வினய்குமார், மன்ப்ரீத் கோனி, வருண் ஆரோன், பர்விந்தர் அவானா, சந்தீப் ஷர்மா என பல பவுலர்கள் ஐபிஎல் மூலம் உருவாகிக் கொண்டிருந்த நிலையில், அனைவரையும் அசைமடக்கி ஜொலிக்க ஆரம்பித்தார் சீனியர் பவுலர் நெஹ்ரா.

சரியான திசையில் பந்து வீசி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்க விக்கெட் வேட்டையை ஒவ்வொரு போட்டியிலும் தொடக்கி வைத்தார். 2015-ல் நடந்த ஐபிஎல் தொடரில், சென்னை அணிக்காக 22 விக்கெட்டுகளைக் குவித்தார். இதை அருகில் இருந்து ரசித்து வியந்த கேப்டன் தோனி, மீண்டும் நெஹ்ராவை டி20 மூலம் சர்வதேச போட்டிகளுக்கு அழைத்து வந்தார். ஆசிய கோப்பை தொடரிலும், 2016 டி20 உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணிக்காக ஆடி அசத்தினார்.

தற்போது, இந்திய அணியின் இளம் கேப்டனாக உள்ள விராட் கோலி தலைமையிலான டி20 அணியிலும் நெஹ்ரா சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில், அவருக்கு ஆடும் லெவனில் இதுவரை இடம் கிடைக்காவிட்டாலும், அடுத்த போட்டியில் நிச்சயம் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

ஆனால், 38 வயதான நெஹ்ரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற உள்ளதாக தற்போது அறிவித்திருக்கிறார். வரும் நவம்பர் 1-ஆம் தேதி டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறவுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியோடு, சர்வதேச போட்டிகளில் இருந்து விடை பெறப் போவதாக தெரிவித்திருக்கிறார்.

18 ஆண்டுகாலமாக தான் மிகவும் நேசித்த விளையாட்டை, தன் தாய் மண்ணில், தன் மக்களுக்கு முன் நிறைவு செய்ய விரும்பும் இந்த வீரனுக்கு, அன்றைய தினம் இந்திய அணியில் விளையாட இடம் கிடைக்க வேண்டும், அந்தப் போட்டியில் விக்கெட்டுகளை அள்ள வேண்டும் என்பதே நமது விருப்பமாக இருக்கிறது.

பல வருடங்களுக்கு முன் சிறுவன் விராட் கோலி சிறப்பாக ஆடியதற்காக, அவருக்கு பரிசளித்த நெஹ்ரா, இன்று அதே சிறுவனின் தலைமையில் இந்திய அணிக்காக ஆடி ஓய்வு பெறுவது என்பது, நிச்சயம் அவரது நினைவிலும், நமது நினைவிலும் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும்.

வாழ்த்துகள் நெஹ்ரா!!

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close