நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்தய அணி மிகவும் போராடி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இறுதிப் போட்டியில் 337 ரன்கள் குவித்தும், 6 ரன்கள் வித்தியாசத்தில் தான் இந்தியாவால் வெற்றிப் பெற முடிந்தது.
நியூசிலாந்தின் டாம் லாதம், மூத்த வீரர் ராஸ் டெய்லர் ஆகியோர் இந்திய பவுலர்களுக்கு பெரும் சவாலாக விளங்கினர். குறிப்பாக, ராஸ் டெய்லர் சிறப்பான ஃ பார்மில் இருக்கிறார். முதல் ஒருநாள் போட்டியில், இந்தியாவின் 281 ரன்கள் இலக்கை, நியூசி வெற்றிகரமாக சேஸிங் செய்ய, 95 ரன்கள் விளாசி உதவினார்.
இந்த நிலையில், நாளை (நவ.,1) டெல்லியில் தொடங்கும் இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் ராஸ் டெய்லர் சேர்க்கப்பட்டுள்ளார். சுமார் 19 மாதங்களுக்கு பின் டி20 போட்டிக்காக மீண்டும் அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் அவர் கடைசியாக விளையாடியிருந்தார். அதன்பின், டி20 தொடர்களில் அவர் சேர்க்கப்படவேயில்லை. தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தார்.
இதுகுறித்து நியூசிலாந்து கோச் மைக் ஹெசன் கூறுகையில், "இப்போது ராஸ் நல்ல ஃபார்மில் உள்ளார். மிடில் ஆர்டரில் நிச்சயம் அணிக்கு அவர் வலுச் சேர்ப்பார். டி20-ஐ பொறுத்தவரை நாங்கள் தான் தற்போது உலக சாம்பியன். மற்ற அணிகளை விட நாங்கள் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்தியாவில் இந்தியாவை எதிர்ப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல" என்றார்.
இதுவரை ராஸ் 73 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவரது ஆவரேஜ் 24. ஸ்டிரைக் ரேட் 120. புள்ளிவிவரத்தின் படி அவரது ஸ்டிரைக் ரேட் 120-ஆக இருக்கலாம். ஆனால், கிரிக்கெட் வல்லுனர்களுக்கு தெரியும், இவர் எவ்வளவு அபாயகரமான வீரர் என்று.
உண்மையில் இவர் மெக்குல்லம், டி வில்லியர்ஸ் ஆகியோருக்கு இணையான ஒரு அதிரடி வீரர் தான். ஆனால், தனது ஃபார்மில் இவர் அடிக்கடி கோட்டை விடுவதால், அதிகம் சோபிக்க தவறி விடுகிறார். 2011-ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த பாகிஸ்தானிற்கு எதிரான உலகக்கோப்பை போட்டி ஒன்றில் ராஸ் டெய்லர் அடித்த அடியை எவரும் மறந்திருக்க மாட்டார்கள்.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து, 45.5-வது ஓவரின் போது எடுத்திருந்த ரன்கள் 210. களத்தில் நிற்கும் ஒரே பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் தான். ஆனால், 50 ஓவர்கள் முடிவில் நியூசி., எடுத்த ரன்கள் 302 என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், அது எப்படிப்பட்ட அடி என்று!. சோயப் அக்தர் வீசிய 46-வது ஓவரில் 3 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் விளாசி, அவரை தெறிக்கவிட்டவர் ராஸ் டெய்லர். தனி ஆளாய் கடைசி 5 ஓவர்களில் 90 ரன்கள் விளாசினார்.
இந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் முழு ஃபார்மில் இந்திய அணிக்கு எதிராக டி20 போட்டியில் களமிறங்கியிருப்பது இந்திய அணிக்கு நிச்சயம் ஆபத்து தான்!.
Squad: Kane Williamson (c), Trent Boult, Tom Bruce, Colin de Grandhomme, Martin Guptill, Matt Henry, Tom Latham, Henry Nicholls, Adam Milne, Colin Munro, Glenn Phillips, Mitchell Santner, Ish Sodhi, Tim Southee, Ross Taylor.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.