தென்னாப்பிரிக்காவை அடிச்சு துவைச்சாச்சு! அடுத்து…? ‘சுதந்திரம்’ தான்

அடுத்ததாக இந்திய அணி இலங்கை சென்று அங்கு முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவிருக்கிறது

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நீண்ட தொடர் ஒருவழியாக இந்திய ரசிகர்கள் திருப்திப்படும் அளவிற்கு தித்திப்புடன் முடிந்துள்ளது. டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தாலும், ஒருநாள் தொடரை 5-1 என கிட்டத் தட்ட ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி, டி20 தொடரையும் 2-1 என கைப்பற்றி, முதன் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் இரண்டு கோப்பைகளை வென்று நாடு திரும்பியுள்ளது. கோலி தலைமையிலான இந்திய அணியின் செயல்பாடு, ஒட்டுமொத்தமாக மெச்சத்தக்க வகையிலேயே அமைந்தது.

சரி! அடுத்து..?

அடுத்ததாக இந்திய அணி இலங்கை சென்று அங்கு முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவிருக்கிறது. இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கும் இந்த முத்தரப்பு தொடர் மார்ச் 6ம் தேதி கொழும்புவில் தொடங்குகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். அதில் புள்ளிகளின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி, மார்ச் 18ம் தேதி நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இறுதிப் போட்டியையும் சேர்த்து மொத்தம் 7 போட்டிகள். இவையனைத்தும் கொழும்பிலேயே நடைபெறுகிறது.

இத்தொடரின் பெயர் ‘நிடாஹஸ்’ டிராபி 2018. இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதமாகவே இத்தொடர் நடத்தப்படுகிறது. சிங்கள மொழியில் ‘நிடாஹஸ்’ என்றால் ‘சுதந்திரம்’ என்று அர்த்தம்.

இதற்கு முன்னதாக, 1998ம் ஆண்டு, இதேபோன்று ‘நிடாஹஸ் டிராபி’ நடைபெற்றது. இலங்கையின் 50வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வகையில் அத்தொடர் நடத்தப்பட்டது. அப்போது டி20 போட்டிகள் அறிமுகம் ஆகவில்லை என்பதால், 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக நடத்தப்பட்டது. அதில், இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்றன.

அசாருதீன் தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் இலங்கையை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பெற்று கோப்பையை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் சச்சின் 128 ரன்களும், கங்குலி 108 ரன்களும் விளாசி, முதல் விக்கெட்டுக்கு 252 ரன்கள் சேர்த்து புதிய உலக சாதனை படைத்தனர். அப்போது, ஒருநாள் போட்டிகளில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த பார்ட்னர்ஷிப் இவர்களுடையது தான்.

இந்த நிலையில், 20 ஆண்டுகள் கழித்து தற்போது நிடாஹஸ் டிராபி தொடர் இந்தாண்டு நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று அறிவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nidahas tri series

Next Story
டி-20 தொடரிலும் ‘கொடி’ நாட்டிய இந்தியா : விராட் கோலி இல்லாமல் கிடைத்த வெற்றிT-20 Cricket Series, India Won South Africa
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com