தீவிரவாதத்தை கட்டுப்படுப்படுத்தும் வரை பாகிஸ்தானுடன் இந்திய அணி கிரிக்கெட் விளையாட வாய்ப்பில்லை என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்தியா, பாகிஸ்தான் அணிகளிடையே கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆகியவற்றிடையே கடந்த 2014-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி 2015-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுககளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே 6 இருதரப்பு கிரிக்கெட் போட்டித் தொடர் நடத்தப்பட வேண்டும். ஆனால், தீவிரவாதத்தை ஆதரிக்கும் வகையில் பாகிஸ்தான் செயல்பட்டு வருவதால், இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்த பிசிசிஐ மறுப்பு தெரிவித்திருந்தது.
இதனிடையே, ஒப்பந்ததின்படி கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ரூ.449 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் தெரிவித்தது. எனவே அந்த இழப்பீட்டை பிசிசிஐ சரிசெய்ய வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த விவகாரம் குறித்த பேச்சுவார்த்தைக்காக, இரு நாடுகளின் கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் துபாயில் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இது தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் கூறியதாவது: எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரவிக்கும் வகையில் பாகிஸ்தானின் செயல்பாடு இருக்கிறது. எனவே, எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் வரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எந்தவித இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற வாய்பில்லை. ஆனால், பலதரப்பு போட்டிகளில் பங்கேற்பதற்கு எந்த வித தடையும் நாங்கள் விதிக்கவில்லை என்று கூறினார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் குறித்த விவகாரங்களில் முடிவு செய்யும் முன்பு, பிசிசிஐ இந்திய அரசிடம் அது தொடர்பாக கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் கூறினார். சாம்பியன்ஸ் டிராபியில் வரும் ஜுன் 4-ம் தேதி நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.