இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஓருநாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, 2-0 என வென்று தொடரை கைப்பற்றிவிட்டது. தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் கூட இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சொந்த மண்ணிலேயே இலங்கை இவ்வளவு மோசமாக விளையாடி வருவது, அந்நாட்டு ரசிகர்களை மிகவும் வெறுப்படைய வைத்துள்ளது.
அடுத்து நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடரிலாவது விட்ட பெருமையை இலங்கை மீட்குமா என்பதை அந்நாட்டின் ரசிகர்கள் மட்டுமல்லாது, இலங்கை கிரிக்கெட் வாரியமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கவுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
அதில், விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், மனீஷ் பாண்டே, அஜின்க்யா ரஹானே, கேதர் ஜாதவ், மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ் குமார், ஷர்துல் தாகுர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சீனியர் வீரர் யுவராஜ் சிங்கிற்கும், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னாவிற்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, முஹமத் ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கடந்த சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடிய தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகியோருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதேபோல், மாற்று விக்கெட் கீப்பர் என்று யாரும் இத்தொடரில் சேர்க்கப்படவில்லை. ('தல' தோனி மீது அவ்ளோ கான்ஃபிடன்ட் போல)