Cricket Tamil News: விளையாட்டு உலகில் "கிரிக்கெட்" மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை வசப்படுத்தியுள்ள இந்த விளையாட்டு போட்டி, டெஸ்ட், ஒருநாள், டி-20 என்று 3 ஃபார்மெட்டுகளில் சர்வதேச அரங்கில் விளையாடப்படுகிறது. இதில் ஒவ்வொரு ஃபார்மெட்டுகளும் ஒவ்வொரு கால கட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
மவுசு குறையும் ஒருநாள் தொடர்…
1983 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பையை இந்தியா வென்ற பிறகு இந்திய ரசிகர்களின் பெரும்பாலானோரின் கவனம் கிரிக்கெட் பக்கம் திரும்பியது. இதன்பிறகு, போட்டி அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதை கருத்தில் கொண்டு 50 ஓவர்களாக மாற்றப்பட்டது. அது முதல், ஒருநாள் கிரிக்கெட்டின் மவுசு அதிகரிக்க தொடங்கியது. இதற்கிடையில், 2003 ஆம் ஆண்டில் டி-20 கிரிக்கெட் உதயமாகியகிது. இருப்பினும், ஒருநாள் கிரிக்கெட் மீதான காதல் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவும், ஆழமாகவும் இருந்தது.
ஆனால், 2007ம் ஆண்டு இந்தியா டி-20 உலக கோப்பையை வென்றது முதலும், 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அறிமுகமாகியது முதலும், அந்த விளையாட்டுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உருவாக ஆரம்பித்தது. இதனிடையே, 2011 ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் உலக கோப்பையை இந்தியா வென்ற பின், மீண்டும் ஒருநாள் தொடர்களின் ஆதிக்கமும், அதற்கான மவுசும் அதிகரித்தது.
2011 உலக கோப்பைக்கு பிறகு இந்தியா எந்த கோப்பையும் வெல்லவில்லை. விராட் கோலி தலைமையிலான அணி வாழ்த்துக்களை விட விமர்சனங்களையே அதிகம் சந்தித்தது. இதனிடையே டி-20 ஆட்டங்களின் வளர்ச்சி அசுரத்தனமாக இருந்தது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் விளையாடும் நாடுகள், அந்தெந்த நாடுகளுக்கு ஏற்ப டி20 லீக்குகளை அறிமுகம் செய்தன.
- இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் - டி-20 ப்ளாஸ்ட் - 2003
- ஆஸ்திரேலியா - பிக் பாஷ் லீக் (பிபிஎல்) - 2011
- பங்களாதேஷ் - பங்களாதேஷ் பிரீமியர் லீக் (பிபிஎல்) - 2012
- நியூசிலாந்து - சூப்பர் ஸ்மாஷ் டி-20 லீக் - 2005
- வெஸ்ட் இண்டீஸ் கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) - 2013
- பாகிஸ்தான் - பாகிஸ்தான் சூப்பர் லீக் - 2016
- இலங்கை - லங்கா பிரீமியர் லீக் (LPL) - 2020
- 100 பந்து கிரிக்கெட் (இங்கிலாந்து) - 2021
- அயர்லாந்து - நெதர்லாந்து - ஸ்காட்லாந்து - யூரோ டி20 ஸ்லாம் - 2022 முதல்
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - சர்வதேச லீக் டி20 - 2023 முதல்
- யுனைடெட் ஸ்டேட்ஸ் - மேஜர் லீக் கிரிக்கெட் (எம்எல்சி) - 2023 முதல்
- தென்ஆப்பிரிக்கா - கிரிக்கெட் தென்ஆப்பிரிக்கா டி20 லீக் - 2023 முதல், என பல டி-20 லீக் போட்டிகள் விளையாடப்பட்டு வருகின்றன. இதனால், ஒருநாள் போட்டிகளின் மீதான ரசிகர்களின் ஆர்வம் குறையத் தொடங்கி இருக்கிறது.
"ரசிகர்கள் எவ்வழியோ அவ்வழியே நாங்கள்" என கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்து விட்டன. தென்ஆப்பிரிக்கா அதன் புதிய டி-20 லீக்கை அடுத்தாண்டில் (ஜனவரி - பிப்ரவரி) தொடங்க உள்ளதால், ஆஸ்திரேலியா உடனான ஒருநாள் தொடரில் விளையாடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.
இப்படியாக டி-20 லீக்குகளின் எழுச்சி மற்றும் டி20 கிரிக்கெட்டை விட இன்னும் குறுகிய வடிவத்தின் பிறப்புக்கு (100 பந்து கிரிக்கெட்) மத்தியில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடப்படுவது குறித்து பற்றியும், அதன் அழிவு பற்றியும் நீண்ட காலத்திற்கு முன்பே மூத்த வீரர்கள் மற்றும் நிபுணர்கள் கவலைப்பட்டனர். மேலும் அது குறித்து கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த பிரபல டி-20 லீக்குகள், ஐபிஎல் தொடர் போல் இன்னும் சர்வதேச அளவில் அதிகம் ஈர்க்கப்படவில்லை என்றாலும், இந்த தொடர்களுக்காக இருதரப்பு தொடர் அட்டவணைகளை ஐசிசி மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்போதைக்கு ஒருநாள் கிரிக்கெட்டின் எதிர்காலம் அச்சுறுத்தலில் இருப்பதாகத் தெரிகிறது. கடந்த வாரம் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸ் (31), ஒருநாள் தொடரில் இருந்து மட்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரின் இந்த திடீர் முடிவு பலருக்கும் அதிர்ச்சி செய்தியாக இருந்தது.
பொதுவாக, கிரிக்கெட்டில் பணிச்சுமை அதிகமாக இருக்கும் வீரர்கள் அல்லது ஒரு ஃபார்மெட்டில் ஃபார்ம் அவுட் ஆனான வீரர்கள் ரெட் பால் அல்லது ஒயிட் பால் கிரிக்கெட்டில் இருந்து விலகுவது வழக்கம். ஆனால், இவர் மற்றொரு ஒயிட் பால் தொடரான டி-20 -யில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும், அதில் அதிக கவனம் செலுத்துவேன் என்றும் கூறியிருந்தார். ஏற்கனவே, டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் குறைவாக விளையாடப்பட்டு வரும் நிலையில் பென் ஸ்டோக்ஸின் இந்த திடீர் அறிவிப்பு பல வீரர்களையும், அணி நிர்வாகத்தையும் யோசனையில் இறங்க முடிவு செய்துள்ளன.
ரவி சாஸ்திரி கருத்து
இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டை இன்னும் சுவாரஸ்யமாக மாற்றுவது எப்படி என்பது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் ஷாஹித் அப்ரிடியின் வார்த்தைகளை மீண்டும் வலியுறுத்தி பேசி இருக்கிறார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டிக்கான வர்ணனையின் போது பேசிய ரவி சாஸ்திரி, அப்ரிடியைப் போலவே, ஒருநாள் தொடரை இப்போது 40 ஓவர்களாகக் குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
“விளையாட்டின் இடைவெளியைக் குறைப்பதில் எந்தத் தீங்கும் இல்லை. ஒரு நாள் கிரிக்கெட் தொடங்கும் போது 60 ஓவர்கள் கொண்டதாக இருந்தது. 1983ல் நாங்கள் உலகக் கோப்பையை வென்றபோது அது 60 ஓவர்கள். அதன்பிறகு, 60 ஓவர்கள் சற்று நீளமானது என்று மக்கள் நினைத்தனர். 20 முதல் 40 வரையிலான ஓவர்கள் ஜீரணிக்க கடினமாக இருப்பதை மக்கள் கண்டறிந்தனர். அதனால் அதை 60ல் இருந்து 50 ஆக குறைத்தார்கள்.அந்த முடிவு எடுத்து பல வருடங்கள் கடந்துவிட்டன. இப்போது ஏன் 50லிருந்து 40 ஆக குறைக்கக் கூடாது. ஏனென்றால் நீங்கள் முன்னோக்கிச் சிந்திக்க வேண்டும் மற்றும் கிரிக்கெட் புதிய பரிமாணத்திற்கு மாற வேண்டும்." என்று கூறியுள்ளார்.
முன்னதாக, ஸ்டோக்ஸ் ஓய்வுக்குப் பிறகு சமா டிவிக்கு அளித்த பேட்டியின் போது அப்ரிடியும் இதேபோன்று பேசி இருந்தார். “ஒரு நாள் கிரிக்கெட் இப்போது மிகவும் சலிப்பாகிவிட்டது. எனவே, ஒரு நாள் கிரிக்கெட்டை மேலும் பொழுதுபோக்குக்காக மற்ற, 50 ஓவர்களில் இருந்து 40 ஓவர்களாக குறைக்க நான் பரிந்துரைக்கிறேன்." என்று அவர் கூறியிருந்தார்
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.