இந்தியாவிற்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த சாகித் அஃப்ரிடி!

பாகிஸ்தானின் முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் சாகித் அஃப்ரிடி இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது ஆகஸ்ட் 14-ஆம் தேதி, பாகிஸ்தான் தனது 70-வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வண்ணமயமான வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. வாகா எல்லையில் உள்ள 400 அடி கொடிமரத்தில் நேற்று நள்ளிரவு பாகிஸ்தான் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

பாகிஸ்தானின் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, இந்தியாவைச் சேர்ந்த ‘இந்தியன் அகபெல்லா பேண்ட் வாக்ஸ்சார்ட்’ குழு பாகிஸ்தானின் தேசிய கீதத்தை பாடி அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. “ஹேப்பி பர்த்டே பாகிஸ்தான்” என்று அவர்கள் வாழ்த்தியுள்ளனர்.

இரண்டு நிமிடம் ஓடக் கூடிய இந்த வீடியோ, பாகிஸ்தான் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பலரும், இந்தியாவிற்கு தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று இந்தியாவின் 71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தானின் முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் சாகித் அஃப்ரிடி இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “இந்தியாவிற்கு சுதந்திர தின வாழ்த்துகள். அண்டை நாடுகளை மாற்றுவதற்கான வழி இல்லை. சமாதானம், சகிப்புத்தன்மை மற்றும் அன்பு ஆகியவற்றை அனைவரும் சேர்ந்து வளர்ப்போம். மனிதகுலம் வெற்றிபெறட்டும். நம்பிக்கை எப்போதும் அவுட்டாகாது” என்று தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ட்விட்டரில் இந்த பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close