இந்தியாவில் சினிமாவும், கிரிக்கெட்டும் இல்லையெனில் மக்கள் பைத்தியமாகிவிடுவார்கள். அந்தளவிற்கு இவ்விரண்டையும் மக்கள் நேசிக்கின்றனர். இந்த எண்ணத்தில் சற்றும் குறைவில்லாத மற்றொரு நாடு பாகிஸ்தான். கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் வெறியர்கள் என பல தரப்பினர் அந்நாட்டில் உள்ளனர்.
ஆனால், கடந்த 2009 -ம் ஆண்டு மார்ச் மாதம், இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியபோது, நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அங்கு சர்வதேசப் போட்டிகள் நீண்ட காலமாக நடைபெறாமல் இருந்துவந்தது. மற்ற நாடுகள் அங்கு சுற்றுப்பயணம் செய்ய பயந்தன.
குறிப்பாக, இந்திய அணி பாகிஸ்தானிற்கு செல்வதற்கான வாய்ப்பே இல்லை என்ற நிலை உள்ளது. அவ்வப்போது, இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதால், பாகிஸ்தானிற்கு இந்தியாவோ, இந்தியாவில் பாகிஸ்தான் அணியோ சுற்றுப்பயணம் செய்து விளையாட முடியாது என இந்திய அரசு அறிவித்துவிட்டது.
இருப்பினும், கடந்த 2015-ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணி பாகிஸ்தான் மண்ணில் விளையாடியபோதும், அது ஐ.சி.சி-யின் ஆதரவு இல்லாமல்தான் நடைபெற்றது. அந்தத் தொடருக்கு ஐ.சி.சி தனது நடுவர்களை அனுப்ப மறுத்துவிட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணி இந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இந்திய அணியை வீழ்த்தி உலக கிரிக்கெட் ரசிகர்களைத் தங்கள் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தது. இனிமேலாவது எங்கள் மண்ணில் விளையாட வாருங்கள் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது மற்ற நாடுகளுக்கு கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், சுமார் எட்டு வருடங்கள் கழித்து தற்போது ஐ.சி.சி அனுமதியுடன் பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக, டுபிளெசிஸ் தலைமையில் உலக லெவன் அணி நேற்று பாகிஸ்தான் வந்தது. லாகூர் தங்கியுள்ள உலக அணி வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
போட்டி நடைபெறும் கடாஃபி மைதானமும் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. உலக லெவன் அணியில், இந்தியர்கள் யாரும் இல்லை என்றபோதும் ஆசிய வீரர்கள் இருப்பதால், பாகிஸ்தான் அணிக்கு உலக லெவன் சவால் அளிக்கும். இந்திய துணைக் கண்டத்தில் அதிக போட்டிகள் விளையாடிய அனுபவம்கொண்ட வீரர்கள், உலக லெவன் அணியில் இருக்கிறார்கள். டுபிளெசிஸ், ஆம்லா, மில்லர், இம்ரான் தாஹிர், மோர்னி மோர்கெல் போன்ற ஐ.பி.எல் நட்சத்திரங்களுடன் ஆசிய வீரர்களான தமீம் இக்பால், திசெரா ஃபெரெரா ஆகியோரும் உலக லெவன் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடிய அதே அணிதான் களமிறங்குகிறது. அந்த அணியின் நம்பிக்கைக்குரிய பந்து வீச்சாளரான ஆமிர், தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் இருப்பதால், இந்தத் தொடரில் அவர் மட்டும் பங்கேற்கவில்லை. இந்தப் போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
எப்படியாவது இந்தத் தொடரை எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல், வெற்றிகரமாக நடத்திவிட்டால் இனி மற்ற நாடுகளும் வரத் தொடங்கும் என்பதால், பாகிஸ்தான் அரசு, உலக லெவன் அணி வீரர்களுக்கு ஆறு அடுக்கு பாதுகாப்பை அளித்துள்ளது.